Skip to main content

சவுதியில் கணவர் மர்மசாவு; உடலை மீட்டு தரக்கோரி மனைவி திருவாரூர் ஆட்சியரிடம் கண்ணீர்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
d1

 

சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கணவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக கூறி, உரிய விசாரணை மேற்கொண்டு  உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது மனைவி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

 

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன் வயது 43. அவரது மனைவி மிதுனகோகிலா(38).  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்  நடந்துள்ளது.  இவர்களுக்கு ஜெய்ஸ்ரீராம்(6) என்ற மகனும் உள்ளார். 

 

d

 

சிவகார்த்திகேயன் கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டுனராக சவூதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த
2018 மே மாதம் 19ஆம் தேதி மீண்டும் சவூதி நாட்டில் ரியாத் நகரில்ஃபெச்சர் என்ற நிறுவனத்திற்கு ஓட்டுநர் வேலைக்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் கடந்த அக்டோபர்11ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது மனைவி மிதுனகோகிலாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு 5 தினங்களாக சிவகார்த்திகேயனிடம் இருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. இதனால் கலக்கமடைந்த மிதுனகோகிலா கடந்த 22ம் தேதி ரியாத்தில் தனது கணவருடன் பணியாற்றும் நண்பர்களிடம் விசாரித்துள்ளார்.

அப்போது சிவகார்த்திகேயன் கடந்த 12ஆம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தின் பின் இருக்கையில் ரத்தம் சிந்திய நிலையில் இறந்து கிடந்ததாகவும், அவரது உடலை போலீசார் எடுத்து சென்றுள்ளதாகவும் அதிர்ச்சிகர தகவலை நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தகவலை கேட்ட மிதுனகோகிலா அதிர்ச்சி அடைந்து தனது உறவினர்களிடம் தெரிவித்து விசாரிக்க கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் குறித்து அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் கேட்டபோது, சிவகார்த்திகேயன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். ஏன் இத்தனை நாளாக சிவகார்த்திகேயன் இறந்தது குறித்து தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிவகார்த்திகேயனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்தனர்.

 

சிவகார்த்திகேயன் உறவினர்கள் கூறுகையில் " சிவகார்த்திகேயன்  இறப்பில் மர்மம் உள்ளது அவரிடமிருந்த பணம் காணவில்லை, அவர் ஓட்டி சென்ற வாகனத்தின் முன் இருக்கையில் இல்லாமல் பின் இருக்கையில் ரத்தம் சிந்திய நிலையில் இறந்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே உரிய விசாரணை மேற்கொண்டு அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் ".என கோரிக்கை விடுத்தனர்.

 

சார்ந்த செய்திகள்