sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்தஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Advertisment

இதனையடுத்துஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத்தேடி வருகின்றனர்.