Sattankulam incident ... 5 more cops in the ring of CBCID

சாத்தான்குளத்தில் கொடூர சித்ரவதை காரணமாக, ரணவேதனையை அனுபவித்து கோவில்பட்டி கிளைசிறையில் அடைக்கப்பட்ட தந்தை ஜெயராஜூம், மகன் பென்னிக்ஸும் கடந்த ஜூன் 23ம் தேதியன்று மரணமடைந்தனர். இந்தக் கொட்டடிச் சித்ரவதை மரணங்கள் தேசத்தையே உலுக்கியது மட்டுமல்ல உறையவும் வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, காவல்விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்தது. அந்த யூனிட்டின் ஐ.ஜி.யான சங்கர் மற்றும் டி.எஸ்.பி. அனில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

Advertisment

Sattankulam incident ... 5 more cops in the ring of CBCID

Advertisment

அதன் விளைவாக இன்ஸ்பெக்டர். ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் முத்துராஜ், குமார் உள்ளிட்ட காவலர்கள் என 5 பேர்கள் கொலை வழக்கான 302ன் கீழ்கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர். மேலும் அதுசமயம் காவல் நிலைய பணியிலிருந்த காவலர்கள், தூத்துக்குடியிலுள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் போதிருந்த பென்னிக்ஸின் நண்பர்களும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் நடந்தவைகளை தெரிவித்தனர். அதேசமயம் சம்பவத்தின் போதிருந்த காவலர் தாமஸ், காவல்நிலைய ரைட்டர் ப்யூலா செல்வ குமாரியும் விசாரிக்கப்பட்டார்.

தற்போது எஸ்.எஸ்.ஐ.யான பால்துரை, காவலர்களான சாமதுரை, தாமஸ் மற்றும் வெயிலுமுத்து உள்ளிட்ட 5 போலீசாரை வரவழைத்து அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்திவருகின்றனர். இவர்களில் தாமஸ் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி.யினரால் விசாரிக்கப்பட்டவர். எஸ்.எஸ்.ஐ.யான பால்துரை அப்ரூவராக மாறலாம் என்ற தகவல்களும் கிளம்பின. இவர்களில் காவலர் சாமதுரை கடந்த வருட குடியரசு தினத்தின்போது சிறந்த காவலர் பணிக்கான விருதினை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தகவல்கள் கிளம்பாவிட்டாலும், இன்றைய விசாரணைக்குப் பின்பு இந்த 5 போலீசார்களும் கைது செய்யப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன.