
விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவ்வப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து ஊக்கத் தொகையும் சான்றிதழ்கள் வழங்கினார்.
கல்வி விருது விழா என்ற பெயரில் நடைபெற்ற இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அப்போது, மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி நிறையப் படிக்க வேண்டும். முடிந்த வரைக்கும் எல்லா தலைவர்களையும் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றிப் படியுங்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் கோவையில் சலூன் கடை ஒன்றைத் திறந்து வைக்க வந்த சத்யராஜ் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “நடிகர் விஜய் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது நல்ல விஷயம். அரசியலுக்கு வருவது பற்றி அவரே வெளிப்படையாகச் சொல்லாதபோது நான் அதுபற்றி கருத்து கூறுவது நன்றாக இருக்காது. அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் படிக்க வேண்டும் என்று விஜய் முன்னுதாரணமாகக் கூறியது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் விஜயே இதனைக் கூறுவது எங்களைப் போன்றவர்களுக்குச் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் போஸ்டரில் விஜய் சிகிரெட்டுடன் இருக்கும்படி உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சத்யராஜ், “நடிகர்கள் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. நான் கூட இப்போது ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். அதிலும் சிகிரெட் பிடிக்கிறது மாதிரி காட்சிகள் இருக்கிறது. அதனால் கதைக்கு தகுந்தாற்போல்தான் காட்சிகள் இருக்கிறது” என்றார்.