Advertisment

புல்வாமா தாக்குதல் விவகாரம்: அமித்ஷாக்கு சத்யபால் மாலிக் பதிலடி!

sathyapal malick versus amithsha related pulvama incident

Advertisment

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்த சத்யபால் மாலிக் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.

சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சானது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவிக்கையில், "சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்த போது இது குறித்து எதுவும் கூறாமல் தற்போது குற்றம் சாட்டுகிறார்" என்று கூறி இருந்தார். இந்நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சத்யபால் மாலிக், "நான் ஆளுநர் பதவியில் இருந்து விலகிய பிறகு தான் இந்த பிரச்சனையை எழுப்புகிறேன் என்று கூறுவது தவறானது. தாக்குதல் நடந்த அன்றே இதைப் பற்றி பேசி இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe