Skip to main content

நக்கீரன் இணைய செய்தி.. குடும்ப பாரம் சுமந்த சத்யா குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் வீட்டுமனைப்பட்டா வழங்கினார்!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

sathya got legal document from collector

 

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி, போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சத்தியா. தந்தை இல்லாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வைத்துக்கொண்டு 10 அடி நீளம் 7 அடி அகலம் கொண்ட மண்குடிசையில் வாழ்ந்துவருகிறார். தனக்கும் தன் தாயாருக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்ய, வீட்டுவேலை தொடங்கி விடுமுறை நாட்களில் விவசாயக் கூலி வேலைவரை சென்றுவருகிறார்.

 

மழை காலங்களில், வீட்டில் படுக்கவசதி இருக்காது. இதனால், தன் தாயோடு பக்கத்து வீட்டில் உறங்கி, பகலில் தோட்டவேலை செய்வார். இதனாலையே +2 வில் மதிப்பெண் குறைந்தது. எனினும், மேலும் படித்து, அரசு வேலைக்கு போகவேண்டும் எனக் கனவோடு இருந்து வருகிறார். அதற்கு முன்னால் "கதவு வச்ச ஒரு சின்ன வீடு வேணும்" என்ற அவரது ஆசையை 'மக்கள் பாதை' மூலம் அறிந்து, மாணவி சத்தியாவை சந்தித்து அவரது கோரிக்கைகளையும் வறுமையையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவணத்திற்குக் கொண்டு சென்றோம். அனைத்து உதவிகளும் கிடைக்க நடடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தார் ஆட்சியர். இவைகளை நக்கீரன் இணையத்தில் செயனதியாகவும் வீடியோவாகவும் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளிக்கொண்டு வந்தோம்.

 

செய்தி வெளியான சில மணி நேரத்தில் உதவி செய்ய நக்கீரன் வாசகர்கள் முன்வந்தனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் வருவாய்த துறையினர் சத்தியா குடியிருக்கும் மண்குடிசைக்குச் சென்று ஆய்வு செய்து, மாற்று இடத்தில் குடிமனைப்பட்டாவுக்கான இடம் தேர்வு செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் உதவிகள் செய்தார். நக்கீரன் வீடியோவைப் பார்த்தபிறகு, அலுவலகத்தில் இருக்க முடியாமல் மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் நேரில் சென்று மாணவிக்கு தைரியம் சொன்னதோடு சில உதவிகளும் செய்து தொடர்ந்து கல்லூரி படிப்பிற்கும் போட்டித் தேர்வுக்கும் படிக்க உறுதிஅளித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.

 

மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மாணவிக்கு ஆலோசனைகள் வழங்கியதோடு அவரது தாயாருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துவந்து தங்கவைத்து சிகிச்சை அளித்து வருகிறார். இந்த நிலையில் சத்தியாவை தனது அலுவலகத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டுமனைப்பட்டா வழங்கியதோடு 'உனக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று ஆறுதல்கூறி மேற்படிப்பிற்கு, மகளிர் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டு விடுதியும் ஒதுக்கப்படுவதாகக் உறுதிகூறினார். கண்கலங்க நன்றிகூறி பட்டாவை பெற்றுக் கொண்டார் சிறுமி சத்தியா. 

 

Ad

 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது, “மாணவி சத்தியா குறித்த தகவல் வந்ததும் அதிகாரிகள் ஆய்வுசெய்து நடவடக்கை எடுத்ததன் பேரில், இன்று பட்டா வழங்கப்பட்டது. வீடு கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மாணவி சத்தியா கூறும் போது, “மக்கள் பாதை மூலம் தகவல் அறிந்து நக்கீரன் என் குடும்ப சூழ்நிலையை வெளிக்கொண்டு வந்தது. அதன்பிறகு எனக்காக வீட்டுமனைப்பட்டா, வீடு, மேற்படிப்பிற்கு இடம், விடுதி, அம்மாவுக்கு சிகிச்சை கிடைத்தது. மேலும், நக்கீரன் செய்தி பார்த்து ஏராளமானவர்கள் என்னிடம் ஆறுதலாகப் பேசி உதவிகளும் செய்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி சொல்வதோடு நான் விரும்பிய அரசு அதிகாரியாக வருவதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அதை நிறைவேற்றுவேன்” என்றார்.

 

நக்கீரன் சாரிபிலும் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், அரசு அலுவலர்கள், மற்றும் உதவிகள் செய்துவரும் அனைவருக்கும் நன்றிகள்!
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.