Advertisment

“அமைச்சரின் கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆளா நான்?” -வரலாறை எடுத்துவிட்ட சாத்தூர் எம்.எல்.ஏ!

sathur admk mla

கடந்த ஜூலை 29-31 நக்கீரன் இதழிலேயே, ‘உயிர் பயத்தில் அமைச்சர் – எம்.எல்.ஏ.! அதிமுகவை உடைக்கும் சாதி பாலிடிக்ஸ்!’ என்னும் தலைப்பில், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் இடையிலான மோதலை, கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். ஆளும்கட்சியின் இந்த உட்கட்சி பூசல், தற்போது முற்றி மேடையிலேயே வெடித்திருக்கிறது.

Advertisment

காமராஜர் தங்கியது என் தாத்தா வீட்டில்தான்!

சாத்தூரில்,சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ராஜவர்மன் எம்.எல்.ஏ., பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார்.“என்னை பயப்படறவன்னு நினைக்கிறாங்க. என்னை வெட்டிருவேன்; குத்திருவேன்னு சொல்லுறாங்க. கூலிப்படைய வச்சி காலி பண்ணிருவேன்னு சொல்லுறாங்க. ஆறு மாசமா எனக்கு என்னென்னமோ மிரட்டல் வருது.. நான் எதுக்கும் பயப்படல. நான் யாருக்கும் பயப்படறவன் இல்ல; பயப்பட போறவனும் இல்ல.

Advertisment

sathur admk mla

எங்கப்பா மல்லியிலே, 1984-ல் எம்.எஸ்.ஆர். சைக்கிள் மார்ட் என்று 100 சைக்கிள் வைத்து.. பத்து விரலிலும் மோதிரம் அணிந்து.. தொப்புள் வரைக்கும் செயின் போட்டுக்கிட்டிருந்தார். நான் ஒண்ணும் பிச்சை எடுத்துட்டு இங்கே வரல. இதைச் சொல்லணும்கிறதுக்காக சொல்லுறேன். ஏன்னா.. ஒரு தம்பி இங்கே வந்து மேடையில பேசிட்டாரு. நான் வந்து உழைச்சு முன்னுக்கு வரணும். எங்கப்பா வசதியா இருந்தாரு. எங்கம்மா வந்து, 1958-ல் முள்ளிக்குளத்துல இருந்து கல்யாணம் ஆகி வரும்போது, சிவகிரியில எங்க தாத்தா இருளாண்டித் தேவர், அவருதான் அங்கே நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர். காமராஜரு எங்க தாத்தா வீட்டுலதான் தங்குவாரு. அப்ப அவரு முதலமைச்சர். எங்க வரலாறை தெரிஞ்சிக்கிட்டு பேசணும்.

இனியும் அமைதியாக இருக்க முடியாது!

நான் இங்கே (சாத்தூர்) வந்து டிரைவரா கார் ஓட்டுனதுனால..யாராருடைய அப்பா.. யாராருடைய தகப்பன்.. எங்கே எந்தெந்த தீப்பெட்டி ஆபீசுல வேலை பார்த்தான். எவன் எவன் இந்தக் கட்சியோட உப்பைத் தின்னான்னு எல்லாருக்கும் தெரியும். யாரோ ஒருவரை திருப்திப்படுத்துறதுக்காக, பேசுறாங்க. நான் இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளரா இருந்திருக்கேன். நான் எந்த பொறுப்புக்கும் ஆசைப்படாதவன்னு அவங்களுக்கே தெரியும். என்னை வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சியதைப் போல, ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர கழகச் செயலாளர்களை வைத்துக்கொண்டு, நான் வெட்டி விடுவேன்; குத்திவிடுவேன். நான் அதைசெஞ்சிருவேன். நான் கூலிப்படைய வச்சி செஞ்சிருவேன்னு ஒரு அமைச்சர் என்னை மிரட்டும்போது, நான் எத்தனை நாளைக்கு அமைதியா இருக்க முடியும்?” என்று குமுறித் தீர்த்துவிட்டார்.

அமைச்சர் – எம்.எல்.ஏ. மோதலின் பின்னணி இதுதான் –

கடந்த மார்ச் 22-ஆம் தேதி, விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி.ராஜேந்திரபாலாஜியை விடுவித்ததாக, அதிமுக தலைமைகழகம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு வேறு சிலகாரணங்கள் இருந்தாலும், ‘ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே! இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கரோனாவிடமிருந்து காப்பாற்று!’ என்று ராஜேந்திரபாலாஜி போட்ட ட்வீட்டே காரணம் என்று அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில், நிர்வாக வசதிக்காக விருதுநகர் மாவட்டத்தைப் பிரித்து,புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில், ராஜவர்மன் போன்றோர் இருந்தனர்.இதனைத் தொடர்ந்து, ராஜவர்மனுக்கு ஆதரவான கட்சி நிர்வாகிகள், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் அளித்தனர். கட்சித் தலைமையோ, அந்தப் புகாரைப் பொருட்படுத்தாமல், ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்த நேரத்தில், ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். உரசல் வலுத்ததால், எடப்பாடி ஆதரவாளராக ராஜேந்திரபாலாஜியும், ஓ.பி.எஸ். ஆதரவாளராக ராஜவர்மனும் பார்க்கப்பட்டனர். ஒருவழியாக, ஒருங்கிணைப்பாளர்கள் மோதல்கூட முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால்.. ராஜேந்திரபாலாஜி – ராஜவர்மன் பிணக்கு நீடித்தபடியே இருக்கிறது.

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்!

sathur admk mla

கடந்த 16-ஆம் தேதி, சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி “கே.டி.ஆர். அவர்களை வைத்து இன்றைக்கு பதவி சுகம் அனுபவித்து வருபவர்கள் எத்தனை பேர்? அமைச்சரால் வாழ்வாதாரம் பெற்றவர்கள் எத்தனை பேர்? இன்றைக்கு அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள்? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.” என்று பேசிவிட்டு ‘மன்னர் – மந்திரி – வெள்ளரிக்காய் – பிச்சைக்காரன் – சாம்பார் சாதம் – தயிர் சாதம்’ என்று யாருக்குமே புரியாத ஒரு கதையை எடுத்துவிட்டார்.

25 வருடங்களுக்கு முன், அப்போது அதிமுக மா.செ.வாக இருந்த சுந்தரபாண்டியனிடம் டிரைவராக வேலை பார்த்தவர்தான்,இன்றைய சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன். அந்த சுந்தரபாண்டியனின் மகன் சண்முகக்கனி, முகவர்கள் கூட்டத்தில் ‘பிச்சைக்காரன்’ கதை சொன்னது,ஏதோ ஒருவிதத்தில், ராஜவர்மனுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான பதிலடியாகவே, ‘நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை..’ என்று, தன் குடும்ப செல்வாக்கையும், வரலாறையும், ராஜவர்மனே ஆவேசமாக வெளிப்படுத்தினார்.

கடம்பூர் ராஜு வீட்டில் ராஜேந்திரபாலாஜி டென்ஷன்!

‘ஆறுமாத காலமாகவா எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்தபடியே இருக்கிறார்? இத்தனை மாதங்களாக இதனை ஆறப்போட்டுவிட்டு, இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்விக்கு, சென்னையில், கடந்த 8-ஆம் தேதி, அமைச்சர் கடம்பூர் ராஜு வீட்டில் நடந்த காரசார பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்டுச் சொல்கிறது, ராஜவர்மன் தரப்பு.

அன்று, ராஜேந்திரபாலாஜியைத் தொடர்புகொண்டு,நேரில் பேசவேண்டும் என்று கூறியிருக்கிறார் கடம்பூர் ராஜு. நானே வருகிறேன் என்று சென்றிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. அங்கு, தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ராஜபாளையம் எம்.எல்.ஏ. கோபால்சாமி போன்றோர் இருந்துள்ளனர். 'ராஜவர்மன்…’ என்று பேச்சை ஆரம்பித்ததும் டென்ஷன் ஆன ராஜேந்திரபாலாஜி, ‘நான் உருவாக்கி ஜெயிக்க வைத்து எம்.எல்.ஏ. ஆக்கினேன். ராஜவர்மன் யாரென்று எல்லாருக்கும் தெரியும். ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது எத்தனை பேர் அவர் பின்னால் சென்றார்கள்? அதற்காக அவருக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லிவிட முடியுமா? எனக்கு பதவி முக்கியம் இல்லை’ என்று பேசிவிட்டு, வார்த்தைகளில் அனல் கக்கியிருக்கிறார்.அப்போதுதான், ‘ராஜவர்மனைக் கொலை செய்துவிடுவேன்..’ என்று ராஜேந்திரபாலாஜி பேசியதாகச் சொல்கின்றனர்.

ராஜவர்மன் சொல்வதெல்லாம் பொய்!

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை தொடர்புகொள்ள இயலாத நிலையில், அவரது தரப்பில் நம்மிடம் பேசினார்கள். “தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று பேசி, சாத்தூர் தொகுதியில் அனுதாபம் தேடப் பார்க்கிறார் ராஜவர்மன். வரும் சட்டமன்ற தேர்தலில் வைகோ மகன் துரை போட்டியிடப் போவதாக, மதிமுக வட்டாரத்தில் பேசிவருவது, ராஜவர்மன் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதாகசொல்கிறார்கள்.அடுத்து, தனக்கு சீட் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயத்தில்,பொய் பொய்யாக உளறிக் கொட்டுகிறார். 25 வருடங்களுக்கு முன்,ராஜவர்மனின் அப்பா மல்லியில் 100 சைக்கிள்களை வைத்து,சைக்கிள் கடை நடத்தியதாகச் சொல்கிறாரே? மதுரை போன்ற பெருநகரங்களில்கூட, சைக்கிள் கடையில், வாடகைக்கு விடுவதற்காக 100 சைக்கிள்கள் இருந்திருக்காது. நாங்கள் கேட்கிறோம்.

sathur admk mla

100 சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பதற்கு, அந்த கிராமத்தில் அத்தனை பேர் இருந்தார்களா? இந்தப் பேச்சைக் கேட்டு அந்த கிராமமே சிரிக்கிறது.பத்து விரல்களிலும் தங்க மோதிரம் அணிந்திருந்தாராம் அவருடைய அப்பா. கட்டை விரல்களிலுமா மோதிரம் போட்டிருந்தார்? அட, பொய் சொல்வதையும் பொருத்தமாகசொல்ல வேண்டாமா? அமைச்சர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் வைத்துக்கொண்டு பேசி, பரபரப்புக்காக ‘ஸ்டண்ட்’ அடித்திருக்கிறார்.” என்றனர். சூட்சமமான சேவை தேவை என்பதாலேயே! “உழைத்து முன்னுக்கு வந்ததாகசொல்கிறார் ராஜவர்மன். அப்படியென்ன உழைப்போ? எந்த நேரத்தில் என்ன பேசுவோமென்பதை, ராஜேந்திரபாலாஜியே அறிந்திருக்க மாட்டார். அவரது இயல்பே அதுதான்!

ஜெயலலிதா இருந்தபோதே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை (அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், ராஜபாளையம்) திமுக வென்றது. அதிமுகவில் இப்போது, வெளிப்படையாகவே மோதிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரபாலாஜி எத்தனை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும்,‘ஏழிலும் வெல்வோம்’ என்று மார் தட்டினாலும், எதுவும் பிரயோஜனப்படாது”என்று விருதுநகர் மாவட்ட மாவட்ட நிலவரத்தைச் சொன்னார் அதிமுக சீனியர் ஒருவர்.

மேலும் அவர்,“ராஜவர்மன் படு விவரமான ஆள் என்பது இந்த மாவட்டத்துக்கே தெரியும். ஆரம்பத்தில்,விருதுநகர் மா.செ.வாக இருந்த சுந்தரபாண்டியனிடம் டிரைவராக இருந்தார். அவரிடமிருந்த மா.செ. பொறுப்பு, விநாயகமூர்த்தியிடம் போனதும், அங்குபோய் ஒட்டிக்கொண்டார். அடுத்து, சிவசாமி மா.செ. ஆனார். அவர், இவரைத் தன் பக்கத்திலேயே வரவிடவில்லை. அப்போது, கட்சியை விட்டும் நீக்கப்பட்டார். அடுத்து, ஆர்.பி. உதயகுமார் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ஆனவுடன், அவரிடம் போய் ஐக்கியமானார். பிறகு,ராஜேந்திரபாலாஜி மா.செ. மற்றும் அமைச்சரானதும், கடந்த 9 வருடங்களாக வஜ்ரம் போல் ஸ்ட்ராங்காக ஒட்டிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்த மா.செ. பொறுப்பு பறிக்கப்பட்டதும், ‘விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பலவீனமாக இருக்கிறது. என் பின்னால்தான் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள்.’ என்று அணி சேர்த்தார்.

sathur admk mla

சுந்தரபாண்டியனிலிருந்து ராஜேந்திரபாலாஜி வரை, ராஜவர்மனை எதற்காக பக்கத்தில் வைத்துக்கொண்டனர்? அரசு ஒப்பந்தப் பணிகளில் இருந்து மணல் குவாரிகள் வரை, சகலத்திலும் ‘டீல்’ பேசி முடிப்பதில் ‘கில்லி’ என்பதால்தான். திரைமறைவான காரியங்களில், அவரது ஆலோசனையும், வழிகாட்டலும் மிகத் தேவையாக இருந்திருக்கிறது.‘சூட்சமம்’ நிறைந்த இந்த சேவையே, அரசியலில் ‘உழைப்பு’ என்று போற்றப்படுகிறது. அட, போங்கப்பா!” என்று சலித்துக்கொண்டார்.

‘உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!’ என எம்.ஜி.ஆர். பாடியதெல்லாம், சினிமாவுக்கு மட்டுமே சரிப்பட்டு வரும்! அரசியலுக்கு அல்லவே அல்ல!

rajavarman MLA sathur KD Rajendra Palaji politics admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe