sathiyamangalam to mysour bus

Advertisment

தமிழக - கர்நாடகா ஆகிய இரு மாநிலப் போக்குவரத்திற்கு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு தமிழக அரசுப்போக்குவரத்துக் கழகம் சார்பில், அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

அதைப்போல் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அரசு பஸ்கள் சத்தியமங்கலத்துக்கு இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்களில் வியாபாரிகள் அதிக அளவில் வருவது வழக்கம். குறிப்பாக கர்நாடகாவைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஈரோடு, கோவை பகுதிகளுக்குச் சென்று ஜவுளிகளைக் கொள்முதல் செய்வது வழக்கம்.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக,கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதியிலிருந்து சத்தியமங்கலத்தில் இருந்துகர்நாடகா செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின்போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பஸ்களும் நிறுத்தப்பட்டன. தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் சத்தியமங்கலம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை. இரு மாநிலத்திற்கான பேருந்து சேவை தேவை எனத் தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி 6 நாட்களுக்கு மட்டும் சத்தியமங்கலம் - கர்நாடக மாநிலம் மைசூர் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. அதேபோல் கர்நாடகாவில் இருந்தும் சத்தியமங்கலத்துக்கு பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 7 மாதங்களுக்குப் பிறகு 12ஆம் தேதி முதல், சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மூன்று அரசு பஸ்கள், இரண்டு தனியார் பேருந்துகள் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு இயக்கப்பட்டது. அதைப்போல் மைசூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டது. காலை 8 மணிமுதல் பஸ் போக்குவரத்துச் சேவை தொடங்கியது. அதைத் தொடர்ந்து படிப்படியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு வழிமுறைகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தனியார் பஸ்சில் வேப்பிலை கட்டப்பட்டிருந்தது. இன்று, முதல் நாளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் தாளவாடி மலைப் பகுதியில் இருந்தும் கர்நாடகா மாநில சாம்ராஜ்நகர் பகுதிக்கும் போக்குவரத்துச் சேவை தொடங்கியுள்ளது.

இரு மாநிலப் போக்குவரத்துத் தொடக்கத்தால் மலைப்பகுதி மக்கள் ஒரளவுக்கு இயல்பு நிலை திரும்பியதாக உணர்கிறார்கள். இது நீடிக்க வேண்டும். அப்போதுதான் தொழில் முடக்கம் இல்லாமல் வருவாயை நோக்கிய பயணம் அமையும் என்கிறார்கள்.