Skip to main content

சாத்தான்குளம் சம்பவம்... கைதான எஸ்.ஐ. பால்துரை கரோனாவால் உயிரிழப்பு!!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
 Sathankulam incident ... Arrested SI Baldhurai Corona !!

 

 

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கரோனாவால் உயிரிழந்துள்ளார்.

 

santhankulam

 

கைது செய்யப்பட்ட அன்றே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சர்க்கரை நோய் காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜூலை 24ம் தேதி அவருக்கு கரோனா உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த  நிலையில்  சிகிச்சை பலனின்றி  56 வயதான பால்துரை உயிரிழந்தார்.

 

sathankulam palthurai

 

''என் கணவரின் உயிருக்கு ஆபத்து அவரை காப்பாற்றுங்கள். என் கணவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவர் சிறைச்சாலைக்கு சென்ற பின்பு சர்க்கரை நோயின் அளவு அதிகரித்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். உறவினர்களையோ என்னையோ உள்ளே விட மறுக்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளது. அரசு மருத்துவமனை சரியான சிகிச்சை அளிக்கவில்லை. எனவே அவரை நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். அதற்கு  உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று பால்துரை மனைவி  மதுரை கமிஷனரிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அரசு மருத்துவமனையில் இன்று காலை மாரடைப்பால் பால்ராஜ் மரணமடைந்துள்ளார்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.