சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி!
Advertisment

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுபேர் அளித்த தகவலின் பேரில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார், சுப்பிரமணியபாளையம் பகுதியில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் கோவை சாய்பா பாகலனி பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் முபாரக் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக அபுதாகிர் என்பவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளார். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சதாம் கோவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த சுபேர் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த சுபேர், கடந்த 16ம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சுபேர் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சிபிசிஐடி காவல் துறையினர் 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் 7 நாள் விசாரணைக்கு பின்னர் நேற்று, தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சுபேர் ஆஜர்படுத்தப்பட்டப்பட்டார். அப்போது இந்த விசாரணையில் சுபேரிடம் இருந்து பொருட்கள் எதுவும் கைப்பற்றவில்லை எனவும், முக்கிய தகவல்கள் மட்டுமே பெறப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சசிகுமார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை உக்கடம் பகுதியில் வீசியதாக சுபேர் அளித்த தகவலின் பேரில், ஆயுதங்களை தேடும் பணியை சிபிசிஐடி காவல்துறையினர் துவக்கியுள்ளனர். உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகேயுள்ள வாய்க்காலில் கழிவு நீரை அகற்றி, பொக்லைன் மூலம் தோண்டி ஆயுதங்களை தேடி வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisment