/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_56.jpg)
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கோடநாடு எஸ்டேட். இப்பகுதியில், மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு, சகல வசதிகளுடன் சொகுசு பங்களாவும் உள்ளது. மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருந்த போது, ஓய்வெடுக்க இந்த கோடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு தான் விரும்பி செல்வார். அவரின் நெருங்கிய தோழியான சசிகலாவும் உடன் செல்வார்.
இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு கோடநாடு எஸ்டேட் பங்களாவில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அடுத்தடுத்து வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டு பேசுபொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கடந்த 2017 ஆம் அண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டிக்கப்பட்டு சிறை சென்றனர். இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். அதன் பின்னர், தண்டனைக் காலம் முடிந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறையிலிருந்து சசிகலா உள்ளிட்டோர் விடுதலையாகினர். கொரோனா பிரச்சனை மற்றும் உடல் நலக்குறைவால் கடந்த 7 ஆண்டு காலமாக சசிகலா கோடநாடு பங்களாவிற்குச் செல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 18 ஆம் தேதி 7 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் முதல் முறையாக, கோடநாடு எஸ்டேட் சென்றார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் கோடநாடு எஸ்டேட் சென்றடைந்தார். அவருக்கு வழி நெடுக்க தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் அ.ம.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, சசிகலா கோடநாடு 7 ஆண்டுகள் கழித்து சென்ற ரகசியம் வெளியாகியுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் தியான மடமும் அவரது திருவுருவச் சிலையும் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சசிகலா சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், சசிகலா கோடநாட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், ''கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என கூறி கண்ணீர் சிந்தினார். தொடர்ந்து கண்ணீர் மல்க பேசியசசிகலா, ''கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் உயிரிழந்த காவலாளி ஓம் பகதூர் சிறு வயது முதலே எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். அவரின் கொலை மற்றும் எஸ்டேட் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, நிச்சயமாக ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுக் கொடுப்பார். பிளவுபட்ட அ.தி.மு.க ஒன்றுபட தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த நடவடிக்கை விரைவில் வெற்றியடையும். அ.தி.மு.க ஒன்றுபட ஒருவருக்கொருவர் விட்டுத் தர வேண்டும். அதுதான் அரசியலில் முக்கியமானது" என்றார்.
7 வருடங்கள் கழித்து சசிகலா கோடநாடு எஸ்டேட் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒன்றாக கோடநாடு எஸ்டேட் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)