Skip to main content

அரசியல் நாகரீகம் தெரியாத துரோகிகள்: மீண்டும், மீண்டும் நீந்தி மீண்டு வருவோம்: அதிமுகவை சாடிய திவாகரன்

Published on 21/03/2018 | Edited on 21/03/2018


 

divakaran


"நடராஜனின் இறப்பு எங்களுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு, அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் எல்லோரும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர், பலர் அரசியல் நாகரீகம் தெரியாமல் இருக்கின்றனர்" என்றனர் திவாகரன்.
 

தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் நடராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பதினைந்து நாள் பரோலில் வந்த சசிகலாவை பார்த்து கண்கலங்கினார். பிறகு நடராஜனின் உடலுக்கு மலர்வளையம் வைத்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
 

அவர் கூறுகையில், நடராஜனின் உடல் அவர் விருப்பபடியே திராவிட சுயமரியாதைபடி அவரது உடல் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிரே அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படும். முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாக உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்பணித்தவர். அரசியல் துரோகிகள் எங்களுக்கு எவ்வளவு துரோகம் செய்து வந்தாலும் அதை உறவினர்கள், நண்பர்களின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறோம்.
 

அதிமுகவில் பிரச்சனை உருவானபோதில் இருந்தே நடராஜன் மனதளவில் பாதிக்கப்பட்டு, உடல் நலம் குன்றிப்போனார். எம்ஜிஆர் இறப்பிற்கு பிறகு அதிமுகவை மீட்க நடராஜன் செய்த தியாகம் அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
 

எனது சகோதரியை கரம்பிடிக்கும்போது நான் பள்ளி மாணவனாக இருந்தேன். இந்தி எதிர்ப்புக்காக தனது உயிரையே தியாகம் செய்ய துணிந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராஜேந்திரன் என்பவர் மீது குண்டுபட்டு இறந்தார், அடுத்த குண்டு நடராஜன் மீது படவேண்டியது மயிரிழையில் தப்பித்தார். 
 

அண்ணாவால் அடையாளம் காணப்பட்டு கலைஞரால் வளர்க்கப்பட்டவர் நடராஜன், இவருக்காகவே மக்கள் தொடர்புத்துறையை உருவாக்கிக்கொடுத்தனர். எந்த பதவி மீதும் ஆசைப்படாதவராக கிங் மேக்கராகவே இருந்துவிட்டார்.
 

சசிகலாவுக்கு மூன்று கண்டிசனோடு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது, அதில் தஞ்சையை விட்டுபோகக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என கூறியுள்ளனர். துக்கத்தில் உள்ளவரால் அரசியல் பேசமுடியுமா என்பது கூட தெரியாமல் பரோல் வழங்குறார்கள். அதோடு பரோல் வழங்கி வந்த நாளும், போகிற நாளும் கணக்கிடக்கூடாது ஆனால் அதையும் சேர்த்தே பதினைந்து நாள் பரோல் வழங்கியிருக்கிறார்கள்.
 

நடராஜனால் 75 பேர் அமைச்சராகியுள்ளனர், அவர்களுக்கு நன்றியோ, அரசியல் நாகரீகமோ கிடையாது, அரசியல் வேறு, துக்கம் வேறு என்பது கூட தெரியாதவர்களாக இருந்துகொண்டு பல இன்னல்களை எங்களுக்கு கொடுக்கின்றனர், என்ன துரோகம் செய்தாலும் நாங்கள் நெருப்பாற்றில் நீந்தியவர்கள் மீண்டும், மீண்டும் நீந்தி மீண்டு வருவோம்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.