Sasikala's assets worth Rs 15 crore are frozen!

பினாமி பெயரில் சசிகலா வாங்கியுள்ள 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

Advertisment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017- ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை சட்ட ரீதியாக முடக்கி வருகிறது.

Advertisment

கடந்த 2019- ஆம் ஆண்டு சசிகலாவுக்கு தொடர்புடைய ரூபாய் 1,600 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. இதையடுத்து, 2020- ஆம் ஆண்டு போயஸ்தோட்டம், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ரூபாய் 300 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. அதன் பிறகு, சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான ரூபாய் 2,000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.

கடந்த 2021- ஆம் ஆண்டு சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா என சுமார் 100 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் செய்து வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டி சென்றது.

Advertisment

இந்த நிலையில், சென்னை தி.நகர் பத்மநாப தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் சசிகலா பினாமி பெயரில் வாங்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, ரூபாய் 15 கோடி மதிப்பிலான அந்த நிறுவனத்தையும் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளன. இதுவரை 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடங்கியுள்ளது.