Sasikala visited tanjor to attend family function

Advertisment

டெல்டா மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் நிலையில், அதே மண்ணில் அரசியலில் இருந்து விலகியிருக்கும் சசிகலாவும்,உறவினர் வீட்டு விசேஷம், கோயில்களில் சாமி தரிசனம் என மறுமுனையில் அனல் பறக்கவிட்டு வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவின் இணைபிரியா தோழி சசிகலா, சென்னையில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். சிறையிலிருந்து வந்ததும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த சசிகலா, வரும்போதே அதிமுக கொடி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரையும் பரபரக்கவிட்டார்.பின்னர் திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அமமுகவினரை கலங்கடிக்கவே செய்தது. ஆனாலும் இதில் பிற்கால அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே அவர்கள் தங்களை சட்டமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்திக்கொண்டனர்.

மறுமுனையில் தனக்குபரிச்சையமான சில கோயில்களுக்கும் சென்னையிலிருந்தபடியே சென்றுவந்தார். இந்த நிலையில், 17ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு தஞ்சாவூருக்கு வருகை தந்தார் சசிகலா. தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள நடராஜனின் வீட்டில் தங்கியவர், இன்று (18ஆம் தேதி) காலை தனது கணவர் நடராஜனின் சொந்த ஊரானா விளாருக்குச் சென்றார். அங்கு நடராஜனின் சகோதரர் பழனிவேலுவின் பேரக்குழந்தைகளுக்கு குலதெய்வ கோயிலான வீரனார் கோயிலில் காதுகுத்து விழாவை தலைமையேற்று நடத்தினார். பின்னர் அங்கிருந்த உறவினர்களுடன் மனம்விட்டு கலகலப்பாகப் பேசிவிட்டு, அங்கிருந்து திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

Advertisment

Sasikala visited tanjor to attend family function

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்கங்களுக்கு சன்னதி கொண்ட தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் விளங்கிவருகிறது. அந்தக் கோயிலுக்கு சசிகலா இன்று பகல் 11 மணிக்கு வந்தார். அவருக்கு கோயில்நிர்வாகத்தினர் வரவேற்பளித்தனர். விநாயகரை வழிபட்டுவிட்டு பின்னர் கோயிலுக்குள் வந்த சசிகலா 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்துக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார்.

தொடர்ந்து மகாலிங்கசுவாமி, சுந்தர குஜாம்பாள், மூகாம்பிகை அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் அமைதியாக சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்களுக்குஉணவு பொட்டலங்களையும் குடைகளையும் தானமாக வழங்கினார்.அப்போது செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயன்றபோது, “நான் அரசியலுக்காக வரவில்லை, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன்” என கூறிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.

Advertisment

இதுகுறித்து சசிகலா ஆதரவாளர் ஒருவரிடம் விசாரித்தோம், “சசிகலா அரசியலில் இருந்து முழுமையாக விலகிடவில்லை, நிச்சயமாக வருவார். வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான துரோக கூட்டம் வீழ்ந்ததும் தாயில்லா பிள்ளைகளாக தாயைத் தேடி வருவார்கள். அந்த நேரத்திற்காக சசிகலா காத்திருக்கிறார். தற்போது எடப்பாடி பழனிசாமி தஞ்சை, திருவாரூர், நாகையில் பிரச்சாரம் செய்துவருகிறார். அதே நேரத்தில் சசிகலாவும் டெல்டாவில் முகாமிட்டிருப்பதும் அரசியல்தானே. அதோடு வரும் 20ஆம் தேதி நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. விளாரில் உள்ள அவரது சமாதிக்கு சசிகலா நேரடியாக சென்று அந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார். அதன்பிறகே சென்னைக்கு செல்ல இருக்கிறார். தஞ்சாவூரில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் நேரத்தில் சில கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யவும், பல அரசியல் பிரமுகர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கவும் இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு மாற்றம் நிச்சயம் உண்டு” என்கிறார்.