
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு அப்போலோ சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களிடம் மதுசூதனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அச்சமயம் சசிகலாவும் மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். சசிகலா வருகையை அடுத்து மருத்துவமனையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறினார். ''அதிமுக மீது பற்றுகொண்ட மதுசூதனன் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் வந்து அவரைப் பார்த்தேன். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் நலம்பெற வேண்டும்'' என சசிகலா தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக அதிமுகவைக் கைப்பற்றப்போவதாக சசிகலா ஆடியோ வெளியிட்டுவரும் நிலையில், அப்போலோ வந்த சசிகலா காரில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கர்நாடக சிறையிலிருந்து தமிழ்நாடு வந்தபோதும், சசிகலா அதிமுக கொடி உள்ள காரிலேயே பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ''காரில் அதிமுக கொடியுடன் சசிகலா செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுகவோடு எந்த உரிமையும் இல்லாத சசிகலா, அதிமுக கொடியைக் கட்டுவது தேவையற்றது. பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக சசிகலா தடையாக இருக்கக் கூடாது. ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல் சசிகலா விட்டுத்தர வேண்டும்'' என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.