
சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்த சசிகலா, தி.நகரிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், தஞ்சைக்கு திடீர் எனக் கிளம்பிச் சென்றுள்ளார் சசிகலா.
அவருடைய திடீர் பயணம் குறித்து சசிகலா குடும்ப வட்டாரங்களில் விசாரித்த போது, “மூன்று நாள் இங்கு தங்கியிருப்பது போல அவரது ப்ரோக்ராம் திட்டமிடப்பட்டுள்ளது. அவரது கணவர் நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் 20-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதில், கலந்து கொள்வதற்காகவும், நடராஜனின் சகோதரர் பழனிவேலின் பேரக் குழந்தைகளுக்கு நடக்கும் காதணி விழாவில் பங்கேற்பதற்காகவும் வந்திருக்கிறார்.
குலதெய்வம் கோவிலில் நடந்த காதணி நிகழ்வில் கலந்து கொண்ட சசிகலா, தங்களின் முன்னோர்களை வழிபட்டார். மிகவும் சோக வயப்பட்டவராக காணப்பட்டார் சசிகலா. உறவுகள் பலரும் வந்திருந்தனர். சசிகலாவிடம், நடராஜன் இருந்தபோது குடும்ப உறவுகள் எல்லாம் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருந்தது என்பதைச் சொல்லி பலரும் கண்கலங்கினார்கள். மூன்று நாள் தங்கியிருந்துவிட்டு பிறகு சென்னைக்குத் திரும்புவார்” என்றனர்.

குலதெய்வம் கோயிலில் நடந்த நிகழ்விற்கு வந்திருந்த சசிகலா, அங்குள்ள சாமி பீடத்தில் எழுதியிருந்த, ‘ நட்பும் நன்றியும் மறவோம்’ என்கிற வாசகத்தையே ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்த அவரது உறவினர்கள், “மாமா நடராஜன்தான் இதனை எழுதச் சொன்னார். குல தெய்வம் கோவிலுக்கு வருகிற நமது குடும்பத்தினர் இந்த வாசகங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதச் சொன்னார்” என்று சசிகலாவிடம் தெரிவித்திருக்கிறார்.
அப்போது, “எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இது. நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல; அரசியலுக்கும் பொருந்துவதாக இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் சசிகலா! அவர் நம்பியிருந்த குடும்ப உறவுகளும், அரசியல் உறவுகளும் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்காக சசிகலா அப்படிச் சொன்னதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.