/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_412.jpg)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினசரி செய்யப்படும் உடல் பரிசோதனைபோல் நேற்று (20.01.2021) பரிசோதனை செய்யப்பட்டபோது,அவரது உடல் வெப்பநிலை சற்று அதிகமாகவும், காய்ச்சல் மற்றும் சிறிய அளவிலான மூச்சுத்திணறல் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு சிறையில் இருந்தசசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் சிறைக்கு வந்து சசிகலாவிற்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளித்தனர். அதன் பிறகு நேரடியாக அதிகபட்ச சிகிச்சை தேவை என்பதால் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவாஜி நகர், பைரிங் ஹாஸ்பிடல் என்று சொல்லப்படுகிற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் ராபிட் (RAPID) முறையில் கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் ஆர்.டி-பிசிஆர் (RT-PCR) முறையில் எடுக்கப்பட்ட சோதனையிலும் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் சற்று கட்டுக்குள் வந்ததால் சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். பின் மீண்டும் முச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக நள்ளிரவு 1 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)