/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3395.jpg)
சசிகலாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவரது ஆதரவாளர்களால் கடந்த 18-ந் தேதி தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரவர்களின் பொருளாதார சக்திக்கேற்ப சசிகலாவின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் இருக்கும் காதுகேளாத, வாய்ப்பேச இயலாத பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கி, அவர்களுக்குத் தேவையான நோட் புத்தகங்கள் கொடுத்து கொண்டாடுபவர் அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் என்.வைத்தியநாதன். சசிகலாவின் தீவிர விசுவாசி. இந்தாண்டும் அறுசுவை வழங்கியும், நோட் புத்தகங்கள், விளையாட்டு கருவிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கியும் கொண்டாடினார் என்.வைத்தியநாதன்.
இதேபோல, சசிகலா விசுவாசிகள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை ஏழைக்குழந்தைகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் வழங்கினர். இந்த சம்பவம் அதிமுகவில் உற்று கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், சசிகலாவோ தனது பிறந்தநாளை பணக்காரர்கள் வந்து போகும் சென்னை வேளச்சேரியில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் ஃபீனிக்ஸ் மாலில் தனது குடும்பத்தினருடன் குதுகலமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். ஏழைக்குழந்தைகளுடன் உணவருந்தி அவர்களை மகிச்சிப்படுத்த தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அவரது விசுவாசிகள் பலரும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் சசிகலா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1089.jpg)
இந்த சம்பவம் அதிமுகவில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுகவினர், அரசியல் தலைவர்கள் தங்கள் பிறந்தநாளை ஆடம்பரமின்றி தங்கள் வீட்டிலேயே கேக் வெட்டி எளிமையாக கொண்டாடுவார்கள் அல்லது தங்களின் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்வர். இதையும் தாண்டி சிலர், ஏழைக் குழந்தைகளுக்கு நல உதவிகள் செய்து அந்தக் குழந்தைகளுடன் உணவருந்தி கொண்டாடுவார்கள்.
ஆனால், சசிகலாதான் முதல்முறையாக, ஏழைகள் எட்டிக்கூடப் பார்க்க முடியாத ஆடம்பர மாளிகையான ஃபீனிக்ஸ் மாலில் தனது குடும்ப உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ஏழைக் குழந்தைகளை புறக்கணித்து விட்டார். அதேபோல, அதிமுகவில் சசிகலாவுக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமே, அவரது குடும்ப உறவுகளை விட்டுவிட்டு அரசியல் செய்யமாட்டார் என்பதுதான்.
எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக பெருந்தலைகள் எல்லோருமே, தன்னைச் சுற்றியுள்ள குடும்ப உறவுகளை விட்டுவிட்டு அவர் மட்டும் கட்சிக்குள் வந்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்றுதான் சொல்கிறார்களே தவிர, ஒட்டுமொத்தமாக அவரை புறக்கணிக்கவில்லை. அதாவது, சசிகலாவுக்கு நேரடி வாரிசுகள் கிடையாது. அவர் மட்டும் தான். ஆனால், அவரைச் சுற்றி அவரது சொந்தபந்தங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களைப் புறக்கணித்து விட்டு அவர் வரவேண்டும் என்றுதான் அதிமுக தலைவர்கள் விரும்புகிறார்கள். காரணம், கட்சிக்குள் கலகம் வெடிக்கவும் கட்சிக்கு கெட்டப்பெயரை உருவாக்குவதும் சசிகலாவின் சொந்தங்கள் தான்! அதனால் தான் அவர் மட்டும் அதிமுகவுக்கு வரட்டும் என நினைக்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.
ஆனால், குடும்பத்தினரை விட்டு விட்டு அவரால் வரமுடியாது. அதை நிரூபிப்பது போல, தனது பிறந்தநாளை குடும்ப உறவுகளுடன் கொண்டாடியிருக்கிறார் சசிகலா. ஏழைக் குழந்தைகளுடன் கொண்டாட மறுத்ததும், குடும்ப உறவுகளைப் புறக்கணிக்காததும்தான் சசிகலாவுக்கு எதிராக இருக்கிறது. சசிகலாவின் இயல்பான குணமும் அதுதான். அதனால்தான் அவருக்கு அதிமுக எதிர்ப்பு அதிகரிக்கிறதுஎன்று சுட்டிக்காட்டுகிறார்கள். ஏழைக் குழந்தைகளை புறக்கணித்து ஆடம்பர மாளிகையில் சசிகலா பிறந்த நாளை கொண்டாடியது தான் அதிமுகவில் விமர்சிக்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)