
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, நான்கு ஆண்டு கால சிறைத்தண்டனை முடிந்ததை அடுத்து கடந்த மாதம் விடுதலை ஆனார். அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு வழிநெடுகிலும் அ.ம.மு.க.வினர் செண்டை மேளங்கள் முழங்க, மலர்த்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சென்னை தி.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் சசிகலா தங்கியிருந்தார். இதனிடையே, தீவிர அரசியலில் ஈடுபடுவதாக முதலில் கூறியிருந்த சசிகலா, பிறகு திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிக்கை வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள கோயில்களுக்குச் சென்று சசிகலா வழிபாடு நடத்தினர். நேற்று (19/03/2021) திருச்சி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஶ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் சசிகலா. பிறகு, தஞ்சாவூருக்குப் புறப்பட்ட சசிகலா, அங்கு நடைபெற்ற தனது உறவினர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், இன்று (20/03/2021) சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா அஞ்சலி செலுத்தினார்.