அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் உள்ள அவரின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisment

இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா திடீரென மருத்துவமனைக்குச் சென்று ஓபிஎஸ் மனைவிக்கு அஞ்சலி செலுத்தியதோடு, பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது, கண்கலங்கிய நிலையில் இருந்த பன்னீர்செல்வத்தின் கைகளைப் பிடித்து சசிகலா அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். சில நிமிடங்கள் நீட்டித்த இந்த சந்திப்பிற்கு முன்னரே முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுவிட்டனர்.

Advertisment