Skip to main content

‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை  விசாரணைக்கு வருகிறது...

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
sarkar

 


நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தை இயக்குநர் முருகதாஸ் இடக்கியுள்ளார். இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
 

இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை  கேட்காமல்,  படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்,படத்தின் டைட்டிலில் தன்னுடைய பெயரை சேர்க்க வேண்டும், 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.  


அதில் செங்கோல் என்ற தலைப்பில்  இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ள  நிலையில், தன்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார்.
 

இதுகுறித்து  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளதாகவும் ,அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்ததில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். 
 

எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அறிவிக்கவேண்டும்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் முறையிட்டார். அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை நாளை விசாரிக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.