Skip to main content

ஐ.ஐ.டி. விழாவில் சமஸ்கிருதப் பாடல்! சிபிஎம் கண்டனம்!

Published on 26/02/2018 | Edited on 26/02/2018
iit


சென்னையில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) இன்று காலை நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதுடன், “மகாகணபதிம்” என்ற சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதற்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட அனைவரும் எழுந்து நின்றுள்ளனர். பொதுவாக, தமிழகத்தில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுவதும், மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

ஆனால், இவை இரண்டும் இல்லாமல் இன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற அரசு விழாவில் சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது.அரசு விழாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினுடைய பாடல் இசைக்கப்படுவது என்பது மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.

மேலும் இது சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிப்பினுடைய இன்னொரு வடிவமாகும். உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்திய பாஜக அமைச்சர்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயல்படுவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.

பாஜக ஆட்சியாளர்களின் இத்தகைய சமஸ்கிருத திணிப்பு மற்றும் மதவாதப் போக்கினை இனியும் தமிழ்நாட்டில் அனுமதிக்காத வண்ணம் அனைவரும் குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

எண்ணெய்க் கசிவு; வல்லுநர் குழு சென்னை வருகை

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
oil spill; Expert team visits Chennai

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (14.12.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விசாரணையின்போது தமிழக அரசு, சிபிசிஎல் நிறுவனம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீனவர்கள் தரப்பு என 4 தரப்பினரும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். மீனவர்கள் தரப்பில் வாதத்தை முன்வைக்கையில், “மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படாமல் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஎல் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சுமார் 33 டேங்கர்களில் தலா 220 லிட்டர் என்ற வீதத்தில் 7600 லிட்டர் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணெய்க் கழிவுகள் அகற்றும் பணிக்காக 75 அதிநவீன படகுகள், 4 ஜேசிபிகள், 2 ஆயில் ஸ்கிம்மர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், “மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது. மீனவர்களே எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடும்போது, மணலி தொழிற்சாலை சங்கங்களும் பணியில் ஈடுபட வேண்டும். எண்ணெய்யை அகற்றும் பணியை டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.” என உத்தரவிட்டு இந்த வழக்கை 18 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு பாதிப்பை சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் குழுவினர் எண்ணெய்க் கசிவு பாதிப்பு மற்றும் எண்ணெய்யின் அளவைக் கண்டறிந்து வருகின்றனர். 100 படகுகள் மற்றும் 400 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விரிவான அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் எண்ணெய்க் கசிவை அகற்றுவது தொடர்பாக ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து சிறப்பு வல்லுநர் குழுவினர் நாளை சென்னை வருகின்றனர். இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய், 36 ஆயிரத்து 800 லிட்டர் எண்ணெய் கலந்த தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஐஐடியில் சைவ உணவு சாப்பிடத் தனி இடம்; எதிர்த்த மாணவர்களுக்கு அபராதம்!

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Separate space for vegetarian food at IIT mumbai

 

ஐஐடி வளாகத்தில் உள்ள உணவகத்தில் சைவம் சாப்பிடுபவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி கேண்டீனில் சைவம் சாப்பிடுபவர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அமர்ந்து சாப்பிடுவதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் சைவம் சாப்பிடுபவர்கள் மட்டுமே அனுமதி என எழுதி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர். 

 

இந்த நிலையில் கடந்த வாரம் ஐஐடி வளாகத்தில் செயல்படும் 12,13,14 ஆகிய மூன்று கேண்டீன்களில் 6 மேஜைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக உணவு கவுன்சில் அறிவித்திருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து மாணவர்கள்  போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

அம்பேத்கர் பெரியார் புலே ஸ்டடி சர்க்கிள், மும்பை ஐஐடி நிர்வாகத்தின் உணவு கொள்கை நடவடிக்கைக்காக அமைதியான முறையில் போராடிய மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. நிர்வாகத்தின் இந்தச் செயல், நவீனக் காலத்தில் தீண்டாமையை நிலைநிறுத்துவது போன்று அமைந்துள்ளது எனத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.