சமஸ்கிருத சர்ச்சை: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக்கல்லூரி டீன்!

Sanskrit controversy: Dean of Madurai Medical College transferred to waiting list!

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில், அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும், 'இப்போகிரேடிக் உறுதிமொழி' காலம் காலம் காலமாக அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்கிய காலத்தில் இருந்து பின்பற்றி வரப்படுகிறது.

அரசு மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று (30/04/2022) நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கச் செயலாகும்.

இதன் பொருட்டு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார். மேலும், தன்னிச்சையாக விதிமுறையை மீறி இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததிற்கு துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குநர் மரு நாராயண பாபுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் இனிவரும் காலங்களில் அனைத்துத்துறை தலைவர்களும் எப்பொழுதும் பின்பற்றப்படும் இப்போகிரேடிக் உறுதிமொழி இதையே தவறாது கடைப்பிடிக்க மருத்துவக் கல்வி இயக்குநர் மூலம் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

madurai students
இதையும் படியுங்கள்
Subscribe