ADVERTISEMENT

சட்ட விதிகளுக்கு புறம்பாக பணியாளர்கள் நியமனம்! சிக்கலில் அறநிலையத்துறை துணை ஆணையர்!

12:08 PM Feb 15, 2019 | nagendran

ADVERTISEMENT

"இந்து சமய அறநிலையத்துறையின் சட்டவிதிகளுக்குப் புறம்பாக, தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பலருக்கு பணியாளர் நியமனம் வழங்கியுள்ளார் துணை ஆணையர்." என மாவட்ட ஆட்சியர் தொடங்கி அமைச்சர் ஆணையத்திற்கு ஆதாரத்துடன் புகார் கடிதம் அனுப்பப்பட சிக்கலில் தவிக்கின்றார் சங்கர நாராயணர் கோவில் துணை ஆணையரான செல்லத்துரை.

ADVERTISEMENT

அரியும், அரனும் ஒன்றே எனும் தத்துவத்தை உலகிற்குப் பறைச்சாற்றியது கோமதியம்மனின் ஆடித்தபசு. அத்தகைய பெருமைமிகு சங்கர நாராயண கோலத்தையும், மஹா யோகினி சக்தி பீடத்தினையும் உள்ளடக்கியது நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் சங்கர நாராயணர் திருக்கோவில். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலுக்கு செல்லத்துரை என்பவர் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி வருகின்றார்.

கடந்த வருடம் 7வது மாதத்தில் இங்கு துணை ஆணையராகப் பதவிப் பொறுப்பேற்ற நாள் முதல், சங்கர நாராயணர் கோவிலில் பரிசாரகர், நாதஸ்வரம், நாகசுனை பாதுகாப்பு, காலனி பாதுகாப்பு ஆகிய பணிகளுக்காக தினக்கூலி அடிப்படையிலும், தட்டச்சர், ஸ்டோர் உதவி மற்றும் பல வேலை ஆகிய பதவிகளுக்கு தொகுப்பூதிய அடிப்படையிலும், துணைக்கோவிலான முப்புடாதி அம்மன் கோவிலில் இரவுக்காவலரை தினக்கூலி, பல வேலைக்கு தொகுப்பூதிய அடிப்படையிலும், மற்றொரு துணைக்கோவிலான கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் தொகுப்பூதிய அடிப்படையில் மின் பணியாளர்கள் இருவரையும் தான்தோன்றித்தனமாக நியமித்துள்ளது தான் தற்பொழுது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

திருக்குறுங்குடியை சேர்ந்த இசக்கிமுத்துவோ, " இந்து அறநிலையச் சட்டம் 1959 ( தமிழ்நாடு சட்டம் 22/1959 பிரிவு 116(2)ன் கீழ் இயற்றப்பட்ட விதிகளின் படி திருக்கோவிலில் தினக்கூலி அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாளர்களை நியமிக்க துணை ஆணையர் மற்றும் இணை ஆணையருக்கு எவ்வித அதிகாரம் கிடையாது. அந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக 5 தினக்கூலிப் பணியாளர்களையும், 6 தொகுப்பூதியப் பணியாளர்களையும் லஞ்சம் வாங்கிக் கொண்டு நியமித்துள்ளார் துணை ஆணையர் செல்லத்துரை. இதற்கு முன்பாக இது மாதிரி சட்டவிதிகளுக்கு புறம்பாக பக்ழேந்திரன் எனும் துணை ஆணையர் பணி நியமனம் செய்ததாலே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வாங்கிய இத்தகவலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி துறைரீதியாக அனைவருக்கும் அனுப்பி நடவடிக்கைக்காகக் காத்திருக்கின்றேன்." என்றார் அவர். இதனால் இந்து சமய அறநிலையத்துறையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT