Skip to main content

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

Sanjib Banerjee sworn in as Chief Justice of Chennai High Court


சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார்.

 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி (ஏ.பி.சாஹி) டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை (Sanjib Banerjee) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான, உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்குக்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.

 

அதன்படி,  தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

கரோனா தடுப்பு விதிகள் காரணமாக தனிமனித இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், சபாநாயகர் தனபால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான  சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட  பலரும் கலந்துகொண்டனர்.

 

தலைமை நீதிபதியாக பதவியேற்பதன் மூலம், 1862ல் நிறுவப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திரத்திற்குப் பிறகான 31-வது தலைமை நீதிபதியாகவும் சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்