Skip to main content

மணல் திருடியவரை மணலே பலி வாங்கியது!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

வேலூர் வழியாக செல்லும் பாலாற்றில் தண்ணீர் ஓடுவதை விட மணல் லாரி ஒடுவது தான் அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் மணல் அள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படியிருந்தும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் லாரிகள் பாலாற்றில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றன. இதனை அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இந்நிலையில் காலம்காலமாக பாலாற்றில் மணல் அள்ளியவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மோதி மணல் அள்ளி விற்பனை செய்ய முடியாததால் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலங்களில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர்.

 

sand

 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கானம்பாளையம் சுடுகாடு பாம்பாற்று புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 30 அடி, 40 ஆடி ஆழம் தோண்டி மண்ணோடு கலந்த மணலை எடுத்து பில்டர் செய்து அந்த மணலை மாட்டு வண்டியில் ஏற்றிச்சென்று விற்பனை செய்கின்றனர். இன்று நவம்பர் 15 ந்தேதி மாலை பொறம்போக்கு நிலத்தில் சிலர் திருட்டு தனமாக மணல் அள்ளினர். அப்போது மணல் அள்ளி கொட்டிக்கொண்டுயிருந்த அதே பகுதியை சேர்ந்த 55 வயதுடைய கூத்தன் என்கின்ற ராஜேந்திரன் மீது மணல் சரிந்தது. 

 

இதனைப்பார்த்து மற்றவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயல, முடியவில்லை. இதனால் சம்பவ இடத்திலேயே கூத்தன் பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவயிடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் திருடியவர்களில் ஒருவரை மணலே பலி வாங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மணல் தேவையை பூர்த்தி செய்ய என்எல்சி நிறுவனம் புதிய திட்டம் தொடக்கம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 NLC Company launches new project to meet sand demand

நெய்வேலியில் உள்ள சுரங்கம்-1 அ பகுதியில், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நீக்கப்படும் மேல் மண்ணிலிருந்து, ‘எம்-சாண்ட்’ (M-Sand) எனப்படும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் மணல் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான பூமி பூஜை, நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும் மற்றும் மேலாண் இயக்குநருமான பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார்.

நிலக்கரி அமைச்சகத்தின் பசுமை முன் முயற்சிகளுக்கு இணங்க, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் நதி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், “கழிவிலிருந்து வளம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்திட இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இது போன்ற, பசுமை முயற்சிகளை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் எப்போதும் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆலையானது, சுரங்கத்தில், மேல்மண் நீக்கத்தில் இருந்து பெறப்படும் மண்ணில் இருந்து, ஆண்டுக்கு 2.62 லட்சம் கன மீட்டர், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் தரமான ‘எம்சாண்ட்’ என்ற மணலை உற்பத்தி செய்யும். மேலும், வருகின்ற 2024 ஜனவரி மாத இறுதிக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், தற்போதைய அதிகபட்ச மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், இயற்கை வளமான மணல், அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவது குறையும் என்றும் கருதப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள இதர சுரங்கங்களான, சுரங்கம்-1 மற்றும் சுரங்கம்-2 ஆகியவற்றிலும் இதே போன்று மற்றும் இதைவிட அதிகத் திறன் கொண்ட மணல் ஆலைகள், விரைவில் நிறுவப்படும் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத் தலைவர், இந்த ஆலையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்றும், இது போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், பசுமை முயற்சிகள் வருங்காலங்களில், நிறுவனத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், நிறுவனத் தலைவர் அவர்களுடன் நிறுவன நிர்வாக இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.