Skip to main content

கொள்ளிடம் ஆற்றில் இரவில் மணல் திருட்டு லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020
sand

 

சிதம்பரம் அருகே பெராம்பட்டு கொள்ளிடம் ஆற்றில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல்  5 லாரிகள் மற்றும் பொக்லின் வாகன உதவிவுடன் மணல் திருட்டு நடைபெறுவதாக ஜெயங்கொண்டம்பட்டினம், திட்டுகாட்டூர், பெராம்பட்டு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கொள்ளிடம் ஆற்றுக்கு இரவு நேரத்தில் வந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுக்குள் 5 லாரிகள் மற்றும் பொக்லின் வாகனம் மண் அள்ளுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் லாரி மற்றும் பொக்லின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மணலை லாரி லாரியாக ஏற்றிச் செல்கிறார்கள் அப்பகுதியல் உள்ளவர்கள் கேட்டால் தகுந்த அனுமதியுடன் தான் வெளியே செல்கிறது என்று கூறுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் ஆடு, மாடு கொட்டகையில் கொட்டுவதற்கும் வீட்டின் சாக்கடையில் ஈரத்தை போக்க எங்க ஊரில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து சாக்கில் மண் எடுத்தால் அவர்களை பிடித்து ஆயிரம், இரண்டாயிரம் வசூலிக்கும் இந்த  காவல்துறையினர் லாரி லாரியாக இரவு நேரத்தில் மணல் அள்ளி செல்கிறார்கள் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இந்த லாரிகளை சிறை பிடித்துள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்த அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் .இது அண்ணாமலை நகர் காவல் நிலையம் அருகே பள்ளமாக உள்ள இடத்தில் கொட்டுவதற்கு எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எடுக்காமல் லாரிகளை திருப்பி அனுப்பி விட்டோம். இந்தப் பகுதியில் பல பேர் மணல் திருட்டில் ஈடுபடுகிறார். அவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

Next Story

தொடர் குற்றச் சம்பவம்; பலே திருடனைச் சுற்றி வளைத்த போலீஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
thief who was involved in two-wheeler theft was arrested

வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போயுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ஒரு இருசக்கர வாகனம்  திருடு போனது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று திருவலம் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவமும் இவரின் உருவமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்ட நபர் திருவலம் குகைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிய வந்தது.

அவரைக்  கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.