Skip to main content

மூடப்பட்ட மணல் ரீச்; மௌனம் காக்கும் அதிகாரிகள்; தொழிலாளர்கள் போராட்டம்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

sand reach incident in trichy together farmers and labourers 

 

திருச்சி மாவட்ட விவசாயிகள், மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி நொச்சியம் பகுதியில் உள்ள மாங்குடிமங்கலம் மணல் ரீச் பகுதியிலும் அதேபோல் லால்குடி பகுதியில் உள்ள தாழக்குடி மணல் ரீச் பகுதியிலும் மாட்டு வண்டிகள் மூலம்  காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் காரணம் காட்டி கடந்த 10 நாட்களாக மணல் ரீச் மூடப்பட்டுள்ளது. 

 

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று காலை திருச்சி சுப்பிரமணியன்புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கனிம மற்றும் கண்காணிப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுகுறித்து பேசுகையில், “மணல் ரீச்சை நம்பி 2400 மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் ரீச்சை மூடிவிட்டனர். இதனால் 2,400 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லாரிக்கு வடுககுடி, புத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. இச்செயல் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்படுத்தப்படுகிறது. நாங்கள் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களைக் கொண்டு மணல் அள்ளுகிறோம். ஆனால், அதிகாரிகள் எங்களுக்கு சரியாக பதில் அளிப்பதில்லை. அதிகாரிகள் இப்படியே மௌனம் சாதித்தால் குடும்பத்துடன் வந்து நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாட்டை துரைமுருகன் விடுவிப்பு!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
ntk sattai Duraimurugn Release 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையொட்டி தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதற்கிடையில் நேற்று (10.07.2024) காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழக அரசு மற்றும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது திமுகவின் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்) சார்பில் திருச்சி சைபர் கிரைம் போலீல் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக சாட்டை திருமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நெல்லை வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் இன்று (11.07.2024) கைது செய்தனர். பின்னர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிபதி சுவாமிநாதன் மறுத்து சாட்டை துரை முருகனை விடுவித்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், “இந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

புதுக்கோட்டையில் ரவுடி சுட்டுக் கொலை!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Trichy MGR nagar Durai incident at Pudukottai

திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை. ரவுடியான இவர் மீது 70க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லக்கூடிய வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது துரை தான் வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனால் போலீசார் தற்காப்புக்காக இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக இவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்றவர் ஆவார். மேலும் காவல் ஆய்வாளார் உள்ளிட்ட 5 காவலர்கள் துரை தாக்கியதில் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.