Sand mining issue; Madurai branch of high court postpones verdict

திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், யூனிட் அளவில் மணல் விற்கப்படுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை முடிவடைந்துள்ளது. இதன் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

Advertisment

தமிழக அரசு நேரடி மணல் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிலையில், யூனிட் அளவில் மணல் விற்கப்படுவதால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக வழக்கறிஞர் ராஜேந்திரன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அந்த மனுவில், ‘தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீட்டின் அடிப்படையில் மணல் விற்பனை நடைபெறுவது இல்லை. முறையாக அளவீடு செய்யப்படாமல் விற்பனை நடைபெறுவதால், அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் முறைகேடும் நடைபெறுகிறது. கியூபிக் மெட்ரிக் அளவில் மணல் விற்பனை செய்வதுதான் சரியான வருவாயை தரும். எனவே இதனை முறைப்படுத்த கூறி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மணல் விற்பனை செய்ய தர நிர்ணய அளவீட்டை உருவாக்கி அதன் அடிப்படையில் மணல் விற்பனை செய்ய வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒரு யூனிட் என்பது 2.83 கியூபிக் மீட்டர் ஆகும். எனவே விதிகளின்படி தான் மணல் விற்பனை நடக்கிறது” என்று தெரிவித்தார்.

மனுதாரர் ராஜேந்திரன், “மணல் விற்பனையில் மெட்ரிக் அளவு முறை விதிகள் முழுமையாக பின்பற்றவில்லை. தோராயமாகத்தான் மணல் அளவிடு நடைபெறுகிறது. இதனால் அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது” என்று வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.