Skip to main content

போலி ஆவணம் மூலம் மணல் கடத்திய லாரிகள்... அதிகாரிகளிடம் பேரம் பேச முயற்சி..?

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

நவம்பர் 20ந்தேதி மதியம், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம்  மேம்பாலம் அருகில் இரண்டு லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு சென்றதை ஆம்பூர் வட்டாச்சியர் இந்துமதி பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த லாரிகளை மடக்கி நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார்.

 

sand lorry seized in ambur

 

 

விசாரணையில், அந்த லாரிகள் சசிகுமார், பழனி என இருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மேலும், இந்த லாரிகள் சின்னவரிக்கம் கிராம பகுதியில் இருந்து மணல் எடுக்க வருவாய்த்துறை தந்தது போல், போலி ஆவணத்தை தயார் செய்து மணல் கடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. .

லாரியை சின்னவரிக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர்கள் சேகர், பாஸ்கர் இருவர் ஓட்டி வந்துள்ளதையும் அறிந்தனர். இரண்டு  லாரிகளையும்  பறிமுதல் செய்த வட்டாட்சியர் இந்துமதி, ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில், ஓட்டுநர்களை கைது செய்ய இருந்த நிலையில், ஓட்டுநர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதுப்பற்றியும் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய சின்னவரிக்கம்  பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் சேகர் மற்றும் பாஸ்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மணல் கடத்தும் கும்பல், ஆளும்கட்சியில் உள்ள சில அரசியல் பின்புலம் உள்ள நபர்கள் மூலம் அதிகாரியை சரிக்கட்டும் முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. வழக்கு பதிந்தால் ஆயிரக்கணக்கில் அபராதம் கட்ட நேரிடும், வழக்கு முடியும் வரை லாரியை மீட்க முடியாது. இதனால் அபராதம் கட்டாமல், லாரியை கொண்டு செல்ல பேரம் பேச முயல்வதாக கூறப்படுகிறது.

என்ன செய்யப்போகிறார்கள் அதிகாரிகள் என்பது பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும் ?.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மணல் அரிப்பு; 50 மீட்டர் உள்ளே புகுந்த கடல் நீர்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
nn

தமிழகத்தில் ஜூலை 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்திருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி 5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் 4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கடல் பகுதிகளில் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் நீரானது வெளியேறி உள்ளது. பட்டினம்பாக்கம் லூப் சாலையில் இருந்து சுமார் 50 மீட்டருக்கு உள்ளாக கடல் அலை வீசி வந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக கடற்கரை பகுதியில் நீடிக்கும் சீற்றம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மணல் அரிப்பு ஏற்பட்டு சாலை அருகே கடல் நீர் புகுந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கிருந்த படகுகளை மீனவர்கள் மாற்று இடத்தில் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

Next Story

“மணல் கொள்ளையைத் தடுத்த கோட்டாட்சியரைக் கொல்ல முயற்சி” - அன்புமணி கண்டனம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 Anbumani Ramadoss emphasized wants to crack down on sand mafia

தமிழகத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர்  கோட்டாட்சியர் தெய்வநாயகியின் மகிழுந்து மீது சரக்குந்தை மோதி கொலை செய்ய மணல் கடத்தல் கும்பல் முயற்சி செய்துள்ளது. மணல் சரக்குந்து மோதியதில் வட்டாட்சியர் பயணித்த மகிழுந்து சேதம் அடைந்த நிலையில்,  மணல் சரக்குந்தை பின்னோக்கி இயக்கி வந்து  மீண்டும் மோத மணல் கடத்தல் கும்பல் முயன்றுள்ளது. மகிழுந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச்  செயல்பட்டு, மகிழுந்தை இடதுபுறமாகத் திருப்பியதால் கோட்டாட்சியரும், அவரது உதவியாளர்களும் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மணல் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாகத் தலைவிரித்து ஆடுகிறது. அதிகாரப்படிநிலையில் உயர்ந்த இடத்தில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால் அவர்களுக்கு  எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாஃபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி  சமுக அமைதிக்கும் மிகப்பெரிய  ஆபத்து ஆகும்.

மணல் மாஃபியாக்களால் தமிழ்நாட்டின் பொது அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதன்பின் சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தக் கிராம நிர்வாக அலுவலரை வெட்ட  கடத்தல் கும்பல் அரிவாளுடன் துரத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை  மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றது,  வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டுப் பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதைப் படம் பிடித்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உமாபதியை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியது என மணல் கடத்தல் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

இப்போதும் கூட இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும்  கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதில்தான் ஆர்வம் காட்டினார்கள். முறப்பநாட்டில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததைத் தவிர, மணல் கொள்ளையைத் தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளைக் கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.