Skip to main content

குறையாத தக்காளி விலை; ஆலோசனைக்குப் பின் முடிவெடுத்த அமைச்சர் பெரியகருப்பன்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 'Sales of tomatoes in 500 ration shops'- Minister Periyakaruppan interview

 

தமிழகத்தில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்திருக்கும் நிலையில், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், மேலும் 200 கடைகளில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் அத்துறையைச் சேர்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், ''தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரைக்கும் 35 ஆயிரம் கடைகளில் விற்கலாம் என்றால் கூட தக்காளி கிடைப்பது என்பது சிக்கலாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு நியாயவிலைக் கடைகளில் சராசரியாக 50 கிலோ என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மொத்தமாகப் பண்ணைப் பசுமை கடைகளின் மூலமாக அம்மா உணவகம் போன்ற மற்ற இடங்களில் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சராசரி விற்பனையை விட நான்கு மடங்கு விற்பனை இப்பொழுது கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இயற்கையினுடைய கோளாறுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம். இது எல்லாத் துறைகளும் ஒருங்கிணைந்து செய்யக்கூடிய வேலை. முதலில் விவசாயப் பெருமக்கள் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகள், கனிகள் ஆகியவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் பயிர் செய்தால் நியாயமான விலை கிடைக்கும், இதுபோன்ற தட்டுப்பாடுகள் தவிர்க்கப்படும் என்பதை எல்லாம் வேளாண்துறையின் மூலமாக அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டுறவுத்துறையைப் பொறுத்தவரை விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியில் அவர்களுக்குத் தேவையான நிதி வசதிகளைச் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தொடர்ந்து வேளாண்துறையோடு கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை கலந்து பேசி இருக்கிறோம். உயர்மட்ட அளவில் பேசி முடித்தவுடன் அடுத்த ஆண்டு பருவங்களில் உற்பத்தி குறைகின்ற நேரங்களில் நாம் எப்படி அந்த உற்பத்தியைப் பெருக்குவது என்ற முயற்சியில் ஈடுபட வேண்டும். எப்படிக் கடந்து வர வேண்டும் என்பதற்கான திட்டங்கள் எதிர்காலத்தில் தயாராக இருக்கும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிரான வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Madras High Court action order on Case against Minister Periyakaruppan

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலின் போது அமைச்சர் பெரிய கருப்பன், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்டோருக்கு எதிராக 2 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, அமைச்சர் பெரிய கருப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்தவித முகாந்திரமும் இல்லை. அதனால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இது தொடர்பான மனு இன்று (16-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் வெங்கடேசன், அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட திமுகவினருக்கு எதிரான அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 

Next Story

பண்ணை பசுமை கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Sale of essential commodities through farm green shops
கோப்புப்படம்

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் புயலால் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பண்ணை பசுமை கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பால், பிஸ்கட் விற்பனை செய்யப்படும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அதாவது பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறை சார்பில் 10 நடமாடும் பசுமை கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த கடைகள் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.