Sales sluggish due to non-arrival of other state traders

Advertisment

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே கூடும் மாட்டுச் சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புறப் பகுதியான நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களது மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். இங்கு விற்பனைக்கு வருகிற மாடுகளைத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலுள்ள மாட்டு வியாபாரிகள் அதிகளவில் நேரில் வந்து வாங்கி செல்வது வழக்கம்.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த மாட்டுச் சந்தை கடந்த செப்டம்பர் 2 ந் தேதி முதல் அரசின் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் செயல்படத் தொடங்கியது. முதல் இரண்டு வாரம் மாடுகள் வரத்து என்பது குறைவாகவே இருந்தது. மூன்றாவது வாரத்திலிருந்து மாடுகள் வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் கடந்த நான்கு வாரக் காலமாக வெளிமாநில வியாபாரிகள் இங்கு வராததால் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்த நிலையில், இன்று 30 ந் தேதி கூடிய சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. பசு மாடு 500, எருமைகள் 300, கன்றுக் குட்டிகள் 100 என மொத்தம் 900 மாடுகள் வந்தது.

மாடுகளைத் தென்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும், ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் நேரில் வந்து அவர்களுக்குப் பிடித்த மாடுகளைத் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். பசுமாடு ரூபாய் 30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை விற்பனையானது. எருமை மாடு ரூபாய்.30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்புக் கன்றுக்குட்டி ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் வரத்தான மாடுகள் 90 சதவீதம் விற்பனையானதாக மாட்டுச் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.