சேலம் அருகே, பெண்ணை பாலியல் மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்ட வழக்கில் கைதாகியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகி, முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கும் அடிக்கடி பெண்களை அனுப்பி வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ தொழிற்சங்க செயலாளராக இருந்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், அவர் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. அந்தக் காட்சியில் இருந்த பெண் அளித்த புகாரின்பேரில் மோகன்ராஜை கொண்டலாம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

மோகன்ராஜின் அத்துமீறல் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகும் முன்பே, அவர் மீது வந்த வேறு சில புகார்களின்பேரில் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

SALEM WOMEN INCIDENT VIDEO MOHAN RAJ ARRESTED POLICE INVESTIGATION

இது ஒருபுறம் இருக்க, மோகன்ராஜை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அக். 11ம் தேதி முதல் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் காவல்துறையினர் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார் மோகன்ராஜ். இதற்கிடையே அவருடைய நெருக்கமான நண்பர்களான சதாசிவம், மணிகண்டன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் விசாரணை இறுகிய பிறகே, மோகன்ராஜூம் பேசத் தொடங்கினார்.

மோகன்ராஜ், பெண்களுடன் பாலியல் வல்லுறவு கொள்ளும் சில காட்சிகளை தனது அலைபேசியில் (செல்போன்) இருந்து சதாசிவம், மணிகண்டன் ஆகியோருக்கும் பகிர்ந்து உள்ளார். அந்தக் காட்சிகளை மணிகண்டன் பிறருக்கும் பகிர்ந்துள்ளார். அவர்களின் அலைபேசிகளையும் ஆய்வு செய்தபோது மேலும் நான்கு ஆபாச காட்சிகள் இருந்தன. அந்தக் காட்சிகளில் உள்ள பெண்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையில் மேலும் சில பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்த பெண்கள், குடும்பப் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் பெண்களை குறிவைத்து, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். சில பெண்களை கடன் கொடுத்தும், தனது வலையில் வீழ்த்தியுள்ளார் மோகன்ராஜ்.

இந்நிலையில், அவர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கும் பெண்களை அடிக்கடி 'அனுப்பி' வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. என்றாலும் அந்த பிரமுகர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்? பெயர் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் கூற மறுத்துவிட்டனர். மோகன்ராஜிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.