சேலத்தில், அதிக போதைக்காக மதுபானங்களில் தடை செய்யப்பட்ட ரசாயனத்தை கலந்து விற்ற சந்துக்கடை பெண் சாராய வியாபாரியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா மனைவி பரிமளம் (50). இவர் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சில ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு, சந்துக்கடை மூலமாக சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் பரிமளா வீட்டிற்கு விசாரணைக்குச் சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். அவருடைய வீடு மற்றும் அதே பகுதியில் வசிக்கும் அவருடைய தோழி பழனியம்மாள் என்பவர் வீடு ஆகிய இரு இடங்களில் இருந்தும் 718 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட சில மதுபான பாட்டில்களில் விஷ நெடி அடித்ததால் அவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பினனர். இந்த பரிசோதனையில், மதுவில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அட்ரோபின் ரசாயனம் கலந்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த பரிமளத்தை கடந்த 13.2.2019ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அதிக போதை தருவதற்காக அட்ரோபின் ரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பரிமளா மீது ஏற்கனவே சூரமங்கலம் காவல்நிலையத்தில் சட்ட விரோத மது விற்பனை செய்ததாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அவற்றில் நான்கு வழக்குகளில் அவர் அபராதம் செலுத்தியிருப்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பரிமளாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சூரமங்களம் காவல்துறையினர், மாநகர துணை காவல் ஆணையர் தங்கதுரை ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதையடுத்து, மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் பரிமளாவை 'கள்ளச்சாராயக்காரர்' (பூட்லக்கர்) என்ற பிரிவின் கீழ் குண்டர் கைது செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து, பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை கோவை பெண்கள் தனி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)