Salem traders in trouble with ladies

Advertisment

சேலத்தில், பெரும் வியாபாரிகள், வசதியான இளைஞர்களுடன் நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்து, நூதன முறையில் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் பள்ளப்பட்டி ஜவஹர் மில் பின்பக்கத்தில் அபிராமி கார்டன் என்ற குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு பிரபுராஜ் (50) என்பவர் வசிக்கிறார். சேலம் லீ பஜாரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். குடும்பத்தைப் பிரிந்து பிரபுராஜ் மட்டும் அபிராமி கார்டனில் தனி வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வேலை செய்வதற்காக வந்திருந்தார். அந்தப் பெண்ணிடம் தன் வீட்டிலேயே தங்கி வேலை செய்வதற்காக ஒரு பெண் தேவை என்று பிரபுராஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து, அக். 26ம் தேதி இரவு, இளம்பெண் ஒருவர் பிரபுராஜின் வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்று சொன்னதாக கேள்விப்பட்டு இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார். அவரை உள்ளே அழைத்தார் பிரபுராஜ். சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் தன் உடைகளைக் களைந்து அரை நிர்வாணமாக நின்றுள்ளார்.

Advertisment

இதைப் பார்த்து பிரபுராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் இளைஞர் ஒருவர் அங்கு வந்து, என் மனைவி உன் வீட்டிற்குள் இருப்பதைப் பார்த்தேன். அவருக்கும் உனக்கும் தவறான உறவு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே அந்த இளம்பெண் பிரபுராஜ் அருகில் வந்து நின்றுள்ளார். அதை அந்த இளைஞர் தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார். மேலும் அந்த இளைஞர், உடனடியாக 1.50 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் என் மனைவியும் நீயும் நெருக்கமாக இருக்கும் படத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அரண்டு போன பிரபுராஜ் அவர் கேட்டபடியே பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் மறுநாளே மீண்டும் அங்கு சென்ற இளைஞர், மேலும் 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காவல்துறையில் புகார் செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார். இதில் ஏதோ உள்குத்து இருக்கலாமோ என உணர்ந்த பிரபுராஜ் உடனடியாக பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் பழனியம்மாள் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இரண்டு பெண் உள்பட ஆறு பேர் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிரபுராஜிடம் பணம் பறித்ததாக சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மும்தாஜ் பேகம் என்கிற லட்சுமி (35), குகை பிரபாத் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மனைவி நித்யா (35), கோட்டையைச் சேர்ந்த உமர்பாரூக் (25), பாட்ஷா (55), கோகுல் (25), லைன்மேடு பகுதியைச் சேர்ந்த பயாஸ் (25) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் கேட்டோம். “பிரபுராஜ் வீட்டிற்கு முதலில் மும்தாஜ் பேகம்தான் வேலைக்காகச் சென்றுள்ளார். அவரிடம் நிரந்தரமாக ஒரு பெண் வேலைக்குத் தேவை என அவர் கேட்டுள்ளதை அடுத்து, நித்யா அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் கழிப்பறைக்குச் சென்ற நித்யா, சில நிமிடங்களில் வெளியே அரை நிர்வாணமாக வந்துள்ளார். அவர் வெளியே வந்து பிரபுராஜ் பக்கத்தில் நிற்கும்போதுதான் உமர்பாரூக்கும் அங்கு வந்து சேர்ந்துள்ளார். நித்யா கழிப்பறைக்குச் சென்ற பிறகு அங்கிருந்து உமர்பாரூக்கிற்கு செல்போனில் 'மிஸ்டு கால்' செய்து வரவழைத்துள்ளார். பணத்திற்காக இப்படியொரு நூதன உத்தியை அவர்கள் கூட்டாக சேர்ந்து பின்பற்றியுள்ளனர். இதேபோல் வேறு சிலரிடமும் பணம் பறித்துள்ளனர்” என்கிறார்கள் காவல்துறையினர்.

கைதான அனைவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.