Salem Thirunavukarasu case police caught 11 people

சேலம் அருகே, கூலிப்படையாகச் செயல்பட்டுவந்த வாலிபர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 11 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Advertisment

சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் மகன் திருநாவுக்கரசு (26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ரம்யா (20). இவர்கள், அயோத்தியாபட்டணத்தில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்தனர்.

Advertisment

இந்நிலையில், ரம்யாவின் தந்தை சபரிமலைக்குச் செல்ல இருந்ததால், அவரை வழியனுப்பி வைப்பதற்காக குடும்பத்துடன் திருநாவுக்கரசு டிசம்பர் 17ஆம் தேதி, நாழிக்கல்பட்டிக்குச் சென்றிருந்தார்.

அங்கு அவர், அதே ஊரைச் சேர்ந்த தனது கூட்டாளி சரவணன் என்பவருடன் தனியாக ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது 15 பேர் கொண்ட கும்பல் அவர்களைச் சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பலத்த வெட்டுக்காயம் அடைந்த திருநாவுக்கரசு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Advertisment

மல்லூர் காவல் நிலைய காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, அதே ஊரைச் சேர்ந்த திலீப்குமார் என்ற இளைஞரைக் கொலை செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலையானார்கள்.

திலீப்குமார் கொலைக்குப் பழி தீர்க்கும் விதமாக தற்போது இருவர் மீதும் 15 பேர் கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பதும், அதில் திருநாவுக்கரசு இறந்துவிட்டதும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கவுதம், அலெக்சாண்டர், பாலையன், பாலாஜி, தங்கவேல், பிரகாஷ் உள்பட 11 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தில் மேலும் சில முக்கிய குற்றவாளிகளைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.