சேலத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்கள், தங்க நகைகள், முருகன் சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisment

சேலம் இரும்பாலை கணபதிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த மாதம் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த முருகன் சிலையை திருடிச் சென்றனர்.

Advertisment

salem thief arrested in police seized bikes, golds

இதுகுறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பவ இடம் அமைந்துள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, முருகன் சிலையை திருடிய மர்ம நபர்கள், அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் செல்வது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சேலம் சூரமங்கலம், அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் ஐந்து வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பங்களில் ஒரே கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். திருட்டு கும்பலை பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில், சூரமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) பிடித்து விசாரணை செய்ததில், அந்த நபர் ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளைக்குட்டை பகுதியைச் சேர்ந்த திக்குவாயன் என்கிற அய்யந்துரை (48) என்பது தெரிய வந்தது.

கடந்த ஒரு மாத காலமாக இளம்பிள்ளை, சேலம், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், மேற்படி கார்த்திகேயன் வீட்டில் முருகன் சிலை திருட்டிலும் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார்த்திகேயன் வீட்டில் இருந்து திருடப்பட்ட முருகன் சிலை, 8 பவுன் நகைகள், 8 இருசக்கர வாகனங்கள், ஒரு மூட்டை கவரிங் நகைகள் என 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.