Advertisment

’நக்கீரன் உதவியிருக்காவிட்டால் எங்கள் பேத்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும்’- சேலம் அகதி முகாம் சிறுமியின் பாட்டி பரமேஸ்வரி 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே குறுக்குப்பட்டியில் இலங்கை அகதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சேர்ந்தவர் திருமுருகன். பெயிண்டர். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு காவினியா (13), ரனுஷன் (14) ஆகிய இரு கு-ழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த புவனேஸ்வரி, கடந்த 2007ம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

r

திருமுருகன் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், குழந்தைகளை படிக்க வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் இருவரையும் அதே முகாமில் வசிக்கும் புவனேஸ்வரியின் பெற்றோர் மோதிலால் - பரமேஸ்வரி தம்பதியினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். அவர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், தாரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த சிறுமி காவினியா, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்க கடினமாக இருப்பதால், சமச்சீர் கல்வியில் சேர்ந்து பயில விருப்பம் தெரிவித்தாள். இதையடுத்து சிறுமியை தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று காவினியாவின் மாற்றுச்சான்றிதழை (டி.சி.) வழங்கும்படி அவளது தாத்தாவும், பாட்டியும் கேட்டுள்ளனர். அதற்கு பள்ளி நிர்வாகம், மாணவிக்கு இன்னும் 16500 ரூபாய் கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது. அதை செலுத்தினால்தான் டி.சி. வழங்குவோம் என கறாராக கூறிவிட்டனர்.

s

'தாயை இழந்து, தந்தையின் கவனிப்புமின்றி தவிக்கும் பிள்ளைகளை நாங்கள்தான் பராமரித்து வருகிறோம். அவ்வளவு தொகை செலுத்தும் அளவுக்கு வசதி இல்லை' என்று கூறியும், பள்ளி நிர்வாகம் கட்டணத்தைச் செலுத்தினால்தான் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறி அலைக்கழித்தது. ஒருகட்டத்தில், டி.சி. இல்லாமல் நீங்கள் எப்படி வேறு பள்ளியில் சிறுமியை சேர்த்து விடுகிறீர்கள் என்று பார்க்கலாம் என்றும் அலட்சியமாக கூறியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, கோடை விடுமுறை முடிந்து, திங்கள் கிழமை (ஜூன் 3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட்டன. சிறுமியை அழைத்துக்கொண்டு அவளது தாத்தாவும், பாட்டியும் மாணவர் சேர்க்கைக்காக தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றனர். அப்பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர், மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் மாணவியை சேர்க்க முடியாது என்று தடாலடியாக கூறியதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 'பத்து நாள்களுக்குள் மாற்றுச்சான்றிதழ் பெற்று வந்து விடுகிறோம். இப்போது எங்கள் பிள்ளைக்கு இடம் கொடுங்கள்,' என்றும் கேட்டுள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியர், அப்படியானால் பத்து நாள்கள் கழித்து வந்து சேர்ந்து கொள்ளுங்கள். ஆனால் அதுவரை உங்கள் பிள்ளைக்குதான் வகுப்புகள் வீணாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்வதறியாது தடுமாறிய காவினியாவின் பாதுகாவலர்களான மோதிலால், பரமேஸ்வரி ஆகியோர் நம்மிடம் (நக்கீரன்) விவரங்களைக் கூறி, உதவி கேட்டனர்.

நாமும் அவர்களை பள்ளியிலேயே இருக்கச்சொல்லிவிட்டு, சிறுமியின் குடும்ப வறுமை, பள்ளியில் நடந்த துயரங்கள் குறித்து விரிவாகச் சொல்லி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் உதவி கேட்டோம். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியின் வாட்ஸ்அப் எண்ணுக்கும் இதுகுறித்த தகவலை அனுப்பி இருந்தோம்.

g

இப்பிரச்னை மீது விரைந்து செயல்பட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி காவினியாவை, தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

அத்தோடு ஆட்சியர் நின்று விடவில்லை. சிறுமியின் மாற்றுச்சான்றிதழ் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜூன் 3ம் தேதி மாலையிலேயே சிறுமியை நேரில் வந்து, அவள் படித்து வந்த ஜோதி மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச்சென்று மாற்றுச்சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்தனர். அன்று இரவு நேரமானதால், சிறுமியிடம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழை வழங்கியது.

இதுகுறித்து சிறுமியின் பாட்டி பரமேஸ்வரி கூறுகையில், ''திடீரென்று தாரமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் எங்களுக்கு போன் செய்து, சிறுமி காவினியாவுக்கு டி.சி. கிடைக்கவில்லை என்று கலெக்டருக்கு வாட்ஸ்அப்பில் புகார் செய்தது யார் என்று கேட்டார்கள். அடுத்தடுத்து வேறு சில அதிகாரிகளும் எங்களுக்கு போன் செய்து இது தொடர்பாக கேட்டதால், நாங்கள் பதற்றம் அடைந்து விட்டோம். நீங்கள்தான் (நக்கீரன் பத்திரிகை) கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றீர்கள் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஆனால் அதிகாரிகள், கலெக்டர் மேடம் உத்தரவு என்பதால் சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்தோம் என்றார்கள்.

பின்னர் நாலைந்து அதிகாரிகளுடன் நாங்களும் எங்கள் பிள்ளையை அழைத்துக்கொண்டு அவள் படித்து வந்த பள்ளிக்குச் சென்றோம். அங்கு காவினியாவை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் மறுநாள் காலையில் வந்து டி.சி. பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். அதன்படி இன்று (ஜூன் 4) எங்களுக்கு டி.சி. கிடைத்தது. கலெக்டரும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், நக்கீரனும் உதவியிருக்காவிட்டால் எங்கள் பேத்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும். எல்லோருக்கும் நன்றி,'' என்றார்.

salem collector rohini
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe