Skip to main content

 இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு! ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்!!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 

சேலத்தில், இலங்கை அகதிகள் முகாம்களில் குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

 

r

 

இலங்கையில் எல்டிடிஇ போராளிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களின்போது, அங்குள்ள தமிழர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்காக தமிழகம் முழுவதும் 110 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆரம்பத்தில் 3 லட்சம் அகதிகள் இருந்த நிலையில், பலர் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டனர். 

 

r


இப்போது, 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் குறுக்குப்பட்டி, பவளத்தானூர், நாகியம்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி (வடக்கு மற்றும் தெற்கு) ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.


இந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து அறிவதற்காக நாம் குறுக்குப்பட்டியில் உள்ள இரண்டு முகாம்களுக்குச் சென்றிருந்தோம். 


குறுக்குப்பட்டியில் அட்டை முகாம், ஓட்டுக்கூரை முகாம் என அருகருகே இரண்டு முகாம்கள் உள்ளன. இவற்றில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் பெரும்பாலனோர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே அகதிகளாக வசித்து வருகின்றனர். கால் நூற்றாண்டைக் கடந்த பின்னும், குடியிருக்க வீடு, உணவு, உடை ஆகியவற்றைக் கடந்து அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க வேறெந்த முன்னேற்றமும் இல்லை. 

 

r


இந்த முகாம்களில் குடிநீர் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதனால் அகதிகள், வீடுகளில் உள்ள பெரிய டிரம்கள், குடங்களில் தண்ணீரைப் பிடித்து சேமித்து வைத்துக் கொள்கின்றனர். நீண்ட நாள்களாக சேமித்து வைக்கப்படும்போது, அதில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஈடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகின்றன. 


திடீரென்று சோதனைக்கு வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், நாள் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குடிநீரை தரையில் கவிழ்த்து விட்டுச் சென்று விடுகின்றனர். அவர்களின் இந்த செயல் சரியானதுதான் என்றாலும், 12 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும்போது, குடிநீரை சேமித்து வைக்காமல் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்புகின்றனர் அகதிகள்.    


இந்த முகாமில் வசிக்கும் அகதிகள் சிலர் நம்மிடம் பேசினர்.


''எங்கள் நாட்டில் கழனியையும், சொத்துகளையும் விட்டுவிட்டுத்தான் இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்தோம். இனியும் எங்கள் நாட்டுக்குத் திரும்பப் போகும் உத்தேசமில்ல. ஆனாலும், இந்த முகாமிலும் எங்களுக்கு நல்ல சுகாதாரமான கழிப்பறை, சாலை வசதிகளோ இல்லை. பெண் பிள்ளைகளுக்காக ஒரு கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்காங்க. அதில் கதவுகள் எல்லாம் அரித்துக் கிடக்கின்றன. தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் பெண் பிள்ளைகள் மாதவிலக்கு காலத்தில் ரொம்பவும் அவதிப்படுகின்றனர்.


முகாமில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டி வாறோம். காற்றில் குப்பைகள் பறக்கின்றன. பெண் பிள்ளைகள் சானிட்டரி நாப்கின்களை எரியூட்டப்படாமல் அப்படியே திறந்தவெளியில்தான் தூக்கி வீசுகின்றனர். இதற்கென குப்பைத் தொட்டிகளோ எரியூட்டிகளோ இல்லை. எப்போதாவது குப்பை லாரியை கொண்டு வந்து குப்பைகளை அள்ளிக்கிட்டு போகின்றனர். 

 

r


மாசத்துல ரெண்டு மூணு தடவைதான் குடிக்க தண்ணீர் திறந்து விடுகின்றனர். அதனால் பற்றாக்குறையை சமாளிக்க நாங்களே டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கெ £ண்டு வர்றோம். ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்னு பிடிச்சிக்கிறோம். தண்ணீர் திறந்து விடுவதற்காக இந்த முகாமைச் சேர்ந்த ஜோதி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  அவர் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 15 ரூபாய் கொடுத்தால்தான் தண்ணீர் திறந்து விடுவேன் என்கிறார். இந்த முகாமிற்கு வெளியே உள்ளூரைச் சேர்ந்த யார்  வீட்டிலாவது விசேஷம் என்றால், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, அந்த குடும்பத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகிறார். 


கனமழை பெய்தால் அப்படியே பல நாள்களுக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கும். இதுவரைக்கும் தார் சாலை போடல. இன்னும் தெரு விளக்கு வசதி கூட தமிழக அரசு செய்து தரவில்லை. இதையெல்லாம் கியூ பிராஞ்ச், கலெக்டர்னு பலர்கிட்ட சொல்லி பார்த்துட்டோம். எந்த வசதிகளும் கிடைக்கல. 


தமிழ்நாட்டுக்குள் எந்த மூலையில் நரேந்திர மோடி வந்தாலும் இங்கேயும் கியூ பிராஞ்ச் போலீசார் சோதனை செய்கின்றனர். எங்கேயும் வெளியே செல்லக்கூடாதுனு தடை போடுகின்றனர். நாடு திரும்ப விரும்பாத அகதிகளுக்கு இந்திய அரசு, குடியுரிமை வழங்கினால் பரவால,'' என்கிறார்கள் குறுக்குப்பட்டி முகாம் அகதிகள். 


குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது, முகாமிற்கு வெளியே உள்ளூர் பஞ்சாயத்துக்குச் சொந்தமான பொது குடிநீர் குழாயில் அகதிகள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். அங்கே மணிக்கணக்கில் காத்திருந்தால்தான் உள்ளூர் மக்கள் அகதிகளுக்கு நீர் பிடித்துச்செல்ல அனுமதிக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருப்பதைச் சுட்டிக்காட்டி  குடங்களை நீட்டினாலோ, 'எங்கிருந்தோ வந்த அகதி நாய்களுக்கு அவசரத்தை பாரு. அங்கேயே செத்துத் தொலைய வேண்டியதுதானே...' என்று உள்ளூர் மக்கள் சொல்லும்போது, தாங்கள் மீண்டும் மடிந்து போவதுபோல் இருக்கிறது என கண்ணீருடன் கூறினர். இத்தகைய வசவுச் சொற்களுக்கு குறுக்குப்பட்டி முகாம் பெண்கள் அனைவருமே பலமுறை ஆளாகி இருக்கின்றனர். 


குறுக்குப்பட்டி முகாம் மட்டுமின்றி, சேலத்தில் உள்ள அனைத்து முகாம்களிலும் இதேதான் நிலை. 


ஆண்களில் 80 சதவீதம் பேர் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இங்கே, பி.இ., முடித்த இளைஞர்களும், கல்வியறிவே இல்லாத ஆண்களும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குதான் செல்கின்றனர். அல்லது கட்டுமானத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். மிக மிகச்சொற்பமான இளைஞர்கள்தான் படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்கின்றனர்.


முகாமுக்கு தொடர்பில்லாத அந்நியர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்படியே நுழைந்தாலும் கியூ பிராஞ்ச், வருவாய்த்துறையினர் மூலம் கடும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், உள்ளூர் கந்துவட்டிக்காரர்கள் மட்டும் எவ்வித தடையுமின்றி முகாமிற்கு உள்ளே வந்து செல்வதை நாம் பார்த்தோம். காவல்துறை அதிகாரிகளை கந்துவட்டிக்காரர்கள் 'சரிக்கட்டி' விடுவதால், அவர்களின் ராஜ்ஜியம் எல்லா முகாம்களிலும் பிசிரின்றி தொடர்கிறது. கிட்டத்தட்ட, அகதிகள் எல்லோருமே கந்துவட்டிக்காரர்கள் பிடியில் இருப்பதையும் காண முடிந்தது. 


சிலர், முதியோர் உதவித்தொகை கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை நேரில் மனு கொடுத்துவிட்டு, ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். ஆறுமுகம் (72) என்பவருக்கு இடது கை, இடது கால் வாதத்தால் செயலிழந்து உள்ளது. அவரோ, 'முதல்வர் சேலம் வந்திருந்தபோது இந்த முகாமில் உள்ள பலரும் உதவித்தொகைக்காக விண்ணப்பம் கொடுத்தோம். இன்னும் கிடைத்தபாடில்லை. அரசு கொடுக்கும் குடும்ப உதவித்தொகை, மாத்திரை மருந்து வாங்குவதற்குக்கூட போதவில்லை,'' என்று கண்ணீர் மல்கினார்.


இதுபற்றி, தமிழ்நாடு ஈழ அகதிகள் மறுவாழ்வு துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்.


''சார்... ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் 3 லட்சம் அகதிகள் இருந்தனர். அவர்களில் சொந்த நாட்டுக்கு திரும்பியவர்கள் போக இன்று, 65 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்றைக்கு இருந்தாலும் சொந்த நாட்டுக்குப் போய்டுவாங்க. அதனாலதான் அகதி முகாம்களில் சாலை, தெருவிளக்கு வசதிகள் எல்லாம் அரசாங்கம் செய்து தருவதில்லை. அதுவும் இல்லாமல், தமிழ்நாட்டில் பல பஞ்சாயத்துகளில் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததும் முக்கிய காரணம். 


ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் சராசரியாக 3000 முதல் 4000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 20 கிலோ ரேஷன் அரிசி இலவசமாகவும், அதற்குமேல் 57 பைசா விலையில் அதிகபட்சமாக 28 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. அகதி முகாம்களில் ஆண்களில் பெரும்பாலானோர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். மதுவுக்கு செலவிடுவதில் கணிசமான தொகை செலவழித்தால் அவர்களே தெருவிளக்குகளை போட்டுக் கொள்ளலாமே? இத்தனைக்கும் அவர்களுக்கு மின்சாரம்கூட இலவசம்தான். அவர்களே நாலு பேர் சேர்ந்து வீட்டில் இருந்து வயர்களை இழுத்து தெருவிளக்கு போட்டுக்கொண்டால் நாங்கள் கேட்கவா போகிறோம்? 


முகாம்களில் வசிக்கும் அகதிகளிடம், 'நாம் தற்காலிகமானவர்கள்' என்ற மனநிலை இருக்கிறது. அதேநேரம், நிரந்தர குடிமக்களுக்கான வசதி வாய்ப்புகளைக் கேட்கும் ஆசையிலும் இருக்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மூலம் கோரிக்கை மனு அளித்தால் எது எது அரசாங்கத்தால் முடியுமோ அதை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார், பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரி. 


நாகியம்பட்டி, பவளத்தானூர் முகாம்களில் பெண்கள், சிறுவர்கள் இன்றும் திறந்தவெளியைத்தான் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். 'தூய்மை இந்தியா' மற்றும் தனிநபர் கழிப்பறை குறித்து பெரிய அளவில் பரப்புரை மேற்கொள்ளும் இந்திய அரசு, அகதிகள் முகாம்களில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.


நாலாந்தர குடிமக்களை விடவும் அவல நிலையில் இருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு கணக்குவழக்கு பார்க்காமல் இந்திய அரசும், தமிழக அரசும் தேவையான வசதிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்பதோடு, அவர்களிலும் படித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெண் அகதிகள் வீட்டில் இருந்தே சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித்தர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.