சேலத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை பட்டப்பகலில் கடத்திச்சென்ற தம்பதியினரை குடும்பத்துடன் காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது.

c

Advertisment

சேலம் செவ்வாய்பேட்டை சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மே 22ம் தேதியன்று, வீட்டு வாசலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் கழித்தும் குழந்தை வீட்டுக்குள் வராததால், வெளியே வந்து பார்த்தபோது குழந்தை மாயமாகி இருந்தாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பலரிடமும் விசாரித்தும் குழந்தை சென்ற இடம் தெரியவில்லை. இதனால், அருகில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கும்பல், குழந்தையைக் கடத்திச்சென்று இருப்பது தெரிய வந்தது.

Advertisment

இதுகுறித்து பாலாஜி செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் பஞ்சலிங்கம் தலைமையில் காவல்துறையினர் குழந்தை கடத்தல் கும்பலை தேடினர். இதுகுறித்து பத்திரிகை, காட்சி ஊடகங்களிலும் செய்திகள், கடத்தல் புள்ளிகளின் படங்கள் வெளியானது மற்றும் காவல்துறையினரின் நெருக்கடி ஆகியவற்றை உணர்ந்த குழந்தை கடத்தல் கும்பல், கடத்திச்சென்ற குழந்தையை சேலத்தாம்பட்டி அருகே அனாதையாக விட்டுவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினர், பாலாஜி தம்பதியிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், குழந்தையைக் கடத்தியது ரேவதி (31), அவருடைய கணவர் வேலவன் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களுடைய மகளுக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட குழந்தையை மீட்பதில் சிறப்பாகச் செயல்பட்ட அன்னதானப்பட்டி எஸ்.ஐ. சத்தியமூர்த்தி, செவ்வாய்பேட்டை எஸ்ஐக்கள் பூங்கொடி, மணி, காவலர் கோவிந்தம்மாள் ஆகியோரை மாநகர காவல்துறையினர் மற்றும் குழந்தையின் பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.