Skip to main content

சாலையைக் கடக்க முயன்ற பள்ளிச் சிறுவன் விபத்தில் பலி... அரசுப்பேருந்துகள் மீது தாக்குதல்...!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

சேலம் அருகே, சாலையைக் கடக்க முயன்றபோது, பள்ளிக்கூட புத்தக பையின் கைப்பிடி லாரியின் பின்பக்க கொக்கியில் மாட்டிக்கொண்டதால், சாலையில் தரதரவென 100 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன், பரிதாபமாக பலியானான். இதனால் கிளர்ந்தெழுந்த சிறுவனின் உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அரசுப்பேருந்துகளையும் சேதப்படுத்தினர்.

 

Salem school student incident

 



சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள, துட்டம்பட்டி கோனேரிவளவைச் சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகன் கதிர்வேல் (8). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 6) காலையில் சிறுவன் கதிர்வேல், வழக்கம்போல் பள்ளிக்குக் கிளம்பினான். அவனை, தந்தை செந்தில் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பள்ளிக்கு அருகில் உள்ள சாலையில் இறக்கிவிட்டார்.

அப்போது, சங்ககிரியில் இருந்து ஓமலூருக்கு உணவுப்பொருள்களை அரிசி, பருப்பு உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. சாலையின் ஒருபுறத்தில் இருந்து எதிர்ப்புறத்தில் உள்ள பள்ளிக்குச் செல்வதற்காக சாலையை சிறுவன் கதிர்வேல் கடக்க முயன்றபோது, திடீரென்று சிறுவனின் பள்ளிக்கூட பையின் கைப்பிடி எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் உள்ள கொக்கியில் சிக்கிக் கொண்டது. 

 



இதனால் சிறுவனும் லாரியின் பின்னாலேயே சுமார் 100 அடி தூரம் வரை தரதரவென சாலையில் இழுத்துச் செல்லப்பட்டான். பின்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானான். விபத்தில் சிறுவன் பலியானதை அறிந்த லாரி ஓட்டுநர், லாரியை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து சிறுவனின் தந்தைக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சிறுவனின் சாவுக்கு லாரி ஓட்டுநரின் அலட்சியம்தான் காரணம் என்றும், அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்த வழியாக வந்த இரண்டு அரசுப்பேருந்துளை சிறைப்பிடித்த அவர்கள், பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், பேருந்துகளின் முன்பக்கக் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மக்கள் சூழந்து கொண்டதால் பேருந்தில் வந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். அவர்கள் அலறியடித்தபடி கீழே குதித்து,  வேறு பேருந்துகளைப் பிடித்து அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.  

மறியலில் ஈடுபட்ட ஒரு கும்பல், விபத்துக்குக் காரணமான லாரியை அருகில் உள்ள ஏரி பகுதிக்குக் கொண்டு சென்றனர். பின்னர் லாரி டயர்களை கழற்றி சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். சரக்கேற்றி வந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களை ஏரிக்குள் கொட்டினர். மேலும், லாரிக்கு தீவைக்கவும் முயன்றனர். இதனால் சம்பவம் நடந்த பகுதியே போர்க்களம்போல் காட்சி அளித்தது.

 



இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாரமங்கலம் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், சிறுவனின் பெற்றோர், உறவினர்களை அழைத்துப் பேசினர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் கூடுதல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட கும்பலை அப்புறப்ப டுத்தினர். மேலும், விபத்தில் பலியான சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதையடுத்து, போராட்ட கும்பல் சமாதானம் அடைந்தது. என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடம் அருகே தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சம்பவம் நடந்த இடம் புறவழிச்சாலை பகுதி என்பதால், பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மின்னல் வேகத்தில் வருகின்றன. துட்டம்பட்டி அரசுப்பள்ளி அருகே மாணவர்கள் அன்றாடம் சாலையைக் கடக்கும்போது எப்போது விபத்துகள் நிகழுமோ என்ற பதற்றமும் நிலவி வருகிறது. ஏற்கனவே அந்தப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட சிறு விபத்துகள் நடந்துள்ளதாகவும், துட்டம்பட்டி அரசுப்பள்ளி அருகில் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். இதுவரை நெடுஞ்சாலைத்துறை செவிசாய்க்காத நிலையில், தற்போது சிறுவனின் உயிரையும் காவு வாங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.