சேலம் அன்னதானப்பட்டி ஆயுதப்படை குடியிருப்பில் வசிப்பவர் பழனிவேல் (44). அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

நேற்று அவர் பணிக்குச் செல்லவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை (ஜூன் 1, 2019) அதிகாலையில் அவர் அஸ்தம்பட்டி காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு, தான் விஷம் குடித்து விட்டதாகவும், ஆட்சியர் பங்களா பின்புறம் உள்ள ஆத்துக்காடு பகுதியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இரவு ரோந்தில் இருந்த காவல்துறையினரும், காவல்துறை நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களும் ஆத்துக்காட்டிற்கு சென்றனர். அங்கு விஷ இலைகளைத் தின்றுவிட்டு, மயக்க நிலையில் பழனிவேல் கிடந்தார்.
அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் பொன்ராஜ் விசாரித்து வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் விஷ இலைகளை தின்று இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த பத்து நாள்களுக்கு முன்பு மனைவியுடன் பழனிவேலுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பழனிவேல் மீது அவருடைய மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். அதற்கு முன்பு ஒருமுறை தகராறு ஏற்பட்டபோதும், பழனிவேலின் கையை அவருடைய மனைவி கத்தியால் வெட்டியதாக தெரிகிறது. அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.