salem saloon shop worker family incident police investigation

Advertisment

சேலத்தில், புற்றுநோயால் உயிரிழந்த மூத்த மகனின் பிரிவைத் தாள முடியாமல் சலூன் தொழிலாளி தனது மனைவி, இரண்டு மகன்களுடன் தேநீரில் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சேலம் அம்மாபேட்டை வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38). முடி திருத்துநரான இவர், அப்பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கோகிலா (34). இவர்களுக்கு மதன்குமார் (19), வசந்தகுமார் (17), கார்த்திக் (12) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

இவர்களில் மூத்த மகன் மதன்குமார், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தான். பல ஊர்களிலும் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 19- ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மதன்குமார் உயிரிழந்தான்.

Advertisment

மகன் இறந்த நாள் முதலே பெற்றோர் மனம் உடைந்து காணப்பட்டனர். மகனின் பிரிவுத் துயரம் தாங்க முடியாத முருகனும், அவருடைய மனைவியும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தனர்.

இதையடுத்து டிச. 8- ஆம் தேதி, வேலைக்குச் சென்றிருந்த தனது இரண்டாவது மகன் வசந்தகுமாரை அவசரமாக வீட்டிற்கு அழைத்துள்ளனர். கடைசி மகன் கார்த்திக் அப்போது வீட்டில் இருந்தான்.

கோகிலா அனைவருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். அந்த தேநீரை மனைவி, மகன்கள் இருவருக்கும் முதலில் கொடுத்துள்ளார் முருகன். தேநீரில் சயனடைக் கலந்து கொடுத்து இருந்ததால் குடித்த சிறிது நேரத்தில் மூவரும் மூக்கு, வாயில் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்தனர். அதன்பிறகு சயனைடு கலந்த தேநீரை முருகனும் குடித்து, தற்கொலை செய்து கொண்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

Advertisment

இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

முருகன் வேலை செய்து வந்த சலூன் கடையின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரித்தபோது, புற்று நோயால் இறந்த மகன் மதன்குமாரின் படத்தை கையில் வைத்துக்கொண்டு முருகன் பணியிடத்திலும் பலமுறை கதறி கதறி அழுது வந்திருப்பது தெரிய வந்தது.

மதன்குமார் இறக்கும்போது, முருகனின் கையைப் பிடித்துக்கொண்டு, 'அப்பா... உங்க கூட வாழணும்னு ஆசையா இருக்கு. என்னை எப்படியாவது காப்பாத்திடுங்கப்பா,'னு சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

மூத்த மகனின் மறைவுக்குப் பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. என் மகன் திரும்பி வந்துடுவான் என்று முருகன் தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்துள்ளார். அந்த நம்பிக்கையில், முருகன் குடும்பத்தினர் தினமும் இரவு வீட்டு கதவை திறந்து வைத்தபடியேதான் தூங்கி வந்துள்ளனர்.

ஒருவேளை அசந்து தூங்கிவிட்டால் மகன் வருவது தெரியாமல் போய் விடுமோ என நினைத்து, வாசலை பார்த்தபடி படுத்துத் தூங்கியுள்ளார் முருகன். மகன் வருவதை பதிவு செய்வதற்காக தலையணை அருகே செல்போனை வைத்து, வீடியோ செயலியை 'ஆன்' செய்து வைத்தபடி தூங்கச் செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார் முருகன்.

அவருடைய செல்போனில் ஒரு வீடியோ பதிவு மட்டும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பதிவாகி இருந்தது. அதில், அடிக்கடி முருகன் தனது செல்போனை எடுத்து பார்ப்பதும் பதிவாகி இருந்தது. மகனின் பிரிவுத்துயரத்தை தாள முடியாமல்தான் முருகன் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.