Skip to main content

சேலத்தில் ஒரே நாளில் 35 ரவுடிகள் கைது! மீண்டும் போலீசார் அதிரடி வேட்டை!!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

 


தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு இருந்தே சேலம் மாநகரில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை வரிசையாக கைது செய்து வந்தது சேலம் மாநகர காவல்துறை. 

 

ro


புதுமையான முயற்சியாக, பிணையில் உள்ள குற்றவாளிகள் மற்றும் திருந்தி வாழும் ரவுடிகளின் இருப்பிடத்திற்கே காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று எச்சரிக்கை விடுத்து வந்தனர். அதன்பிறகும் குற்றத்தில் ஈடுபட்டோரை கொத்து கொத்தாக கைது செய்தனர்.


இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பல காவல்துறை ஆய்வாளர்கள், எஸ்ஐக்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டனர். புதிதாக வந்த அதிகாரிகள், இந்த இடமாற்றம் தற்காலிகமானதுதானே என்ற நினைப்பில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்து வந்தனர். இதற்கிடையே தேர்தலும் வந்ததால், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.


காவல்துறையினர் தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வந்ததை பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஓசையின்றி செயல்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து மோப்பம் பிடித்த சேலம் மாநகர நுண்ணறிவுப் பிரிவு, இந்தமுறை நேரடியாக களத்தில் இறங்கினர். 


இந்த பட்டியலில் முதல்கட்டமாக 50 ரவுடிகளை கைது செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த மண்டை விஜி, பிரவீன், துரைசாமி, சுலைமான், தண்டி ஜெயக்குமார், பல்லு குமார், பூபாலன், கோபி, அஜீத், அஜய்விக்னேஷ், சுசீந்திரன், விமல்ராஜ் உள்ளிட்ட 35 ரவுடிகளை ஏப்ரல் 25ம் தேதி ஒரே நாளில் அதிரடியாக கைது செய்தனர். 


இவர்கள் அனைவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சேலத்தில் ரவுடிகளை ஏ, பி, சி என மூன்று பிரிவாக பிரித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏ மற்றும் பி பிரிவு ரவுடிகளின் கொட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.  ஆனால், சி பிரிவு ரவுடிகள் தற்போது அதிகமாக கட்டப்பஞ்சாயத்து செய்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. அவர்களை வளர விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால், முதல்கட்டமாக 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவான ரவுடிகள் விரைவில் கைது செய்யப்படுவர்,'' என்றார். 

சார்ந்த செய்திகள்