salem rowdy goondas act police arrested

சேலத்தில், ரியல் எஸ்டேட் முகவரை கடத்தி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம், வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன். ரியல் எஸ்டேட் முகவர். இவரை கடந்த மார்ச் 6- ஆம் தேதி, மர்ம நபர்கள் சிலர் கடத்திச்சென்று கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 41 ஆயிரம் ரூபாய், ஒரு ஜோடி தங்கத்தோடு, கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

Advertisment

இச்சம்பவம் குறித்து கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேலத்தை அடுத்த மன்னார்பாளையம் பாலப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் அஜித் என்கிற யமஹா அஜித்குமார் (வயது 25), அவருடைய கூட்டாளிகள் சித்தேஸ்வரன், அப்பு என்கிற அரவிந்த், ஆட்டோ பாண்டி ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களில், ரவுடி அஜித் என்கிற யமஹா அஜித்குமார், மேற்படி கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அடிதடியில் ஈடுபட்டதாக அப்போது சூரமங்கலம் காவல்நிலையத்திலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது.

Advertisment

இந்த நிலையில் கடந்த மார்ச் 7- ஆம் தேதி, சென்னகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் ரயில்வே கூட்ஸ் ஷெட் அருகே நடந்து சென்றபோது அவரிடம் கத்தி முனையில் பணம், செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் அஜித்குமார் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரவுடி அஜீத்குமார், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில், அவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 17) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கைது ஆணை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித்குமாரிடம் நேரில் சார்வு செய்யப்பட்டது.