சேலத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டை சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகன் தனசேகரன் (32). பிரபல ரவுடி. அம்மாபேட்டை பாரதி நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு அவருடைய கடைக்குச் சென்ற தனசேகரன், அவருடைய கூட்டாளி ராகதேவன் ஆகியோர் பத்மநாபனிடம் கல்லாவில் இருக்கும் பணத்தைக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டினார்.
அவர் தர மறுக்கவே, கடையில் இருந்த சமையல் பாத்திரங்களை அடித்து நொறுக்கினார். அதை தடுக்க வந்த பத்மநாபன் மனைவியின் வயிற்றில் உதைத்துள்ளார். கடை ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததோடு, கல்லாவில் இருந்த 2000 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில், தனசேகரன், ராகதேவன் ஆகிய இருவரையும் அம்மாபேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், தனசேகரன் கூட்டாளி தன்ராஜ் என்பவருடன் சேர்ந்து, கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக 2016ல் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை முயற்சி வழக்கில் பிணையில் வெளியே வந்த தனசேகரன், சேலம் நஞ்சம்பட்டியில் கடந்த 2016ம் ஆண்டு சோமசுந்தரம் என்பவரிடம் கத்தி முனையில் 2000 ரூபாய் பறித்ததாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவை தவிர மேலும் சில அடிதடி வழக்குகளும் உள்ளன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை ஆணையர் தங்கதுரை, அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனசேகரனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை கடந்த 19ம் தேதி காவல்துறையினர் சார்வு செய்தனர்.