Skip to main content

சேலம் ரவுடி கொலை வழக்கு: தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Salem Rowdy   case: Personal intensity to catch undercover criminals!
செல்லதுரை

 

சேலம் ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் பிணையில் விடுதலை பெற்று தலைமறைவான மூன்று முக்கிய ரவுடிகளை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டு உள்ளனர்.

 

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி செல்லதுரை. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்பட 20 குற்ற வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம், ரவுடி கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அதிமுக வட்ட செயலாளர் பழனிசாமி, அவருடைய சகோதரி மகன் ஜான் என்ற சாணக்கியா உள்பட 32 பேரை கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். 

 

செல்லதுரையுடன் சேர்ந்து கொண்டு கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஜான், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்து சென்றார். மேலும், செல்லதுரைக்கு எதிர் கோஷ்டியான ரவுடி சிலம்பரசனுடன் சேர்ந்து கொண்டார். இது தொடர்பாக செல்லதுரைக்கும், ஜானுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. 

 

இந்த நிலையில்தான் ஜான், வெளியூரைச் சேர்ந்த கூலிப்படை கும்பலை அழைத்து வந்து செல்லதுரையை கொடூரமாக வெட்டிக்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கின் விசாரணை சேலம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 32 ரவுடிகளும் சேலம், மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க வேண்டும்.  

 

கைதான 32 பேரில் 16 ரவுடிகள் பிணையில் வெளியே வந்துவிட்டனர். குற்றப்பத்திரிகை நகலைப் பெறுவதற்காக அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 2 வாய்தாவுக்கு முன்பே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், பிணையில் வெளியே வந்த ஜான் என்ற சாணக்கியா, சின்னவர், ஜெகதீஸ் என்கிற கொம்பன் ஆகிய மூன்று ரவுடிகள் மட்டும் தலைமறைவாகி விட்டனர். இதனால் மற்றவர்களுக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் பிடித்துவர நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. காவல்துறை உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் எஸ்ஐக்கள் வினோத், சரவணன், பழனிசாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் மூன்று ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 


இது ஒருபுறம் இருக்க, மார்ச் 17ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய தனிப்படையினர் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்