salem road incident Obituary of Chief Minister MK Stalin

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்ன கவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது கொண்டலாம்பட்டியிலிருந்து பெருந்துறைக்குச் சென்ற ஆம்னி வேன், லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த கொடூர விபத்தில் வேனில் பயணித்த ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி அருண் கபிலன் மற்றும் போலீசார் விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சின்னக்கவுண்டனூர் கிராமம் அருகே இன்று (06.09.2023) அதிகாலை சேலத்திலிருந்து பெருந்துறை நோக்கிச் சென்ற கார், சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக பின்புறம் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், காவேரிபாளையத்தைச் சேர்ந்த பச்சான் மகன் செல்வராஜ் (வயது 55), ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூர், குட்டப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி (வயது 50), பழனிசாமி மனைவி பாப்பாத்தி (வயது 45), முத்தான் மகன் ஆறுமுகம் (வயது 45), ஆறுமுகம் மனைவி மஞ்சுளா (வயது 40), மற்றும் சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை சஞ்சனா ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

Advertisment

இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.