SALEM REGISTRATION DEPARTMENT DIG ANAND HOME RAID SEIZED MONEY

சேலம் சரக பத்திரப்பதிவுத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான தங்க நாணயங்கள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். லஞ்சப் பணத்தைக் கொண்டு அவர் சேலம், திருவள்ளூர், சென்னையில் பல இடங்களில் சொத்துகளாக வாங்கி குவித்திருப்பது அம்பலமாகி உள்ளது.

Advertisment

சேலம் அழகாபுரம் கைலாசா நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் (46). சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரக பத்திரப்பதிவுத்துறை டிஐஜி ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய அலுவலகம், சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு ஆனந்த், கடலூர் மாவட்டத்திற்கு திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அக். 31- ஆம் தேதி சேலம் அலுவலகத்தில் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு பணியில் இருந்து விடுபட்டார்.

ஆனால், அதன்பிறகு அவர் நவ. 1 மற்றும் 2 ஆகிய இரு நாள்களும் தன் வீட்டில் இருந்தவாறே சார்பதிவாளர்களை வரவழைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டார்.

Advertisment

இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நவ. 1- ஆம் தேதியன்று, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு ஏடிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில் காவல்துறையினர், பதிவுத்துறை டிஐஜி ஆனந்த் வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஆனந்தின் வீட்டில் இருந்து கணக்கில் வராத 3.20 லட்சம் ரொக்கம், 11.75 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள 34 தங்க காசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர் 7 வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார். அந்த கணக்கு விவரங்கள் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். எனினும், வீட்டில் அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்யவில்லை. கடைசியாக இரு நாள்களாக லஞ்சமாக பெற்றதை மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணையில், டிஐஜி ஆனந்த் வேறு மாவட்டத்திற்கு இடமாறுதலில் செல்வதால், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள், சில உள்ளூர் விஐபிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்ளிட்ட பலரையும் அழைத்து பிரிவுபச்சார நினைவுப்பரிசு என்ற பெயரில் லஞ்ச வேட்டையாடி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும், பதிவுத்துறை டிஐஜி ஆனந்த், சென்னை அண்ணா நகர் மேற்கில் 63.70 லட்சம் ரூபாய்க்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.

இது தவிர, சென்னை திருமங்கலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பெரிய சொகுசு பங்களாவும், திருவள்ளூரிலும் அதேபோல் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடு உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவருடைய வங்கி கணக்குகளில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக கணிசமான தொகை வந்து சேர்ந்துள்ளது. ஆனந்த் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கி கணக்கில் பணம் செலுத்திய நபர்களின் விவரங்களைக் கொண்டு லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம், பத்திரப்பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.