சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

சேலம் சூரமங்கலம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவப்பு பாதரசம் (ரெட் மெர்குரி) என்ற கெமிக்கலை வாங்குவதற்காக ஒரு கும்பல் முகாமிட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisment

அணு ஆயுதம் தயாரிப்பிலும், புற்று நோய்க்கான மருந்து தயாரிப்பிலும் சிவப்பு பாதரசம் பயன்படுத்தப்படுகிறது என்றும், சர்வதேச சந்தையில் இந்த பொருளுக்கு பல கோடி ரூபாய் விலைபோகக் கூடியது மோசடி கும்பல் ஒரு தகவலை கசிய விட்டுள்ளது.

 salem Red mercury police investigation

Advertisment

இந்த கும்பல், சேலம் கருப்பூர் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சூரமங்கலம் காவல்ந¤லைய ஆய்வாளர் செந்தில் மற்றும் காவல்துறையினர் சொகுசு விடுதியில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்த 6 பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தும்மணப்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பாண்டியராஜன் (24), வேதாரண்யத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் (38), விழுப்புரம் அய்யந்தூரைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி ரமேஷ் (30), மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தங்கபாண்டியன் (44), கோத்தகிரி சித்த மருத்துவர் கண்ணதாசன் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இந்த கும்பல் சிவப்பு பாதரசத்தை பல கோடி ரூபாய்க்கு பேரம் பேசி விற்பதற்காக சேலத்திற்கு வந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:

இதுவரை இரிடியம், ரைஸ் புல்லிங், மண்ணுளி பாம்பு மோசடி போன்ற குற்றங்களைப் பார்த்து இருக்கிறோம். இந்த கும்பல் புது விதமாக சிவப்பு பாதரசம் என்ற பெயரில் மோசடி செய்ய திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சிவப்பு பாதரசம் அணு ஆயுதம் தயாரிக்கவும், புற்று நோய்க்கான மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்றும், அதனால் உலகச்சந்தையில் ஒரு மில்லி சிவப்பு பாதரசத்தின் விலை 3 கோடி ரூபாய் விலை போகும் கதை அளந்துள்ளனர்.

இந்தப் பொருளை வாங்குவதற்கு ஒரு கோஷ்டி ஒப்புக்கொண்டுள்ளது. மோசடி கும்பலும், சிவப்பு பாதரசத்தை வாங்குவதற்காக வந்த கும்பலும் சேலத்தில் சந்தித்து பொருளையும், பணத்தையும் கைமாற்றிக்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில்தான் இந்த கும்பலை சுற்றிவளைத்துப் பிடித்திருக்கிறோம்.

பொருளை பார்த்துவிட்டு பணத்தை எடுத்து வரலாம் என்றும் ஒரு தரப்பும், பணம் கொண்டு வந்திருக்கிறார்களா என தெரிந்து கொண்ட பிறகு சிவப்பு பாதரசத்தை எடுத்து வரலாம் என மோசடி கும்பலும் திட்டமிட்டு சேலத்தில் கூடியிருக்கிறார்கள். இவர்கள் இரு தரப்புமோ ஒருவரையொருவர் ஏமாற்றும் நோக்கத்தில்தான் இங்கு வந்துள்ளனர். இந்த மோசடி கும்பலில், சிவப்பு பாதரசத்தை பரிசோதித்துக் காட்டுவதற்காக மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவரும், சித்த மருத்துவர் ஒருவரும் வந்துள்ளனர்.

உண்மையில், சிவப்பு பாதரசம் என்ற ஒரு கெமிக்கலே கிடையாது. ஆனால் மோசடி கும்பல் சேலத்தை மையப்படுத்தி தினுசு தினுசாக ஏமாற்ற திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடக்காமல் தடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு காவல்துறையினர் கூறினர்.